பெய்ஜிங்: சீனாவில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட மேற்கத்திய சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலைதளம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது.
எஸ்சிஓ மாநாட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில் வெய்போ சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
இதுகுறித்து சீன அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: சீனாவில் கூகுள் பயன்பாட்டில் இல்லை. உள்நாட்டை சேர்ந்த பைடு என்ற இணைய தேடுதளமே பயன்பாட்டில் இருக்கிறது. இந்த தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த தகவல்களை சீனர்கள் அதிக அளவில் தேடி உள்ளனர்.
மேலும் வெய்போ சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதின், மோடி, ஜி ஜின்பிங் ஒன்றாக கலந்துரையாடிய புகைப்படம், வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரே காரில் பயணம் செய்யும் புகைப்படம், வீடியோவும் வெய்போ தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடியின் துணிச்சலான முடிவுகள், அவரது நடை, உடை பாவனைகள் குறித்து சீனர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் எஸ்சிஓ உச்சி மாநாடு நடைபெறுகிறது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா வந்திருப்பதால் இந்த ஆண்டு எஸ்சிஓ மாநாடு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஊடகங்கள் பிரதமர் மோடி சார்ந்த தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டு உள்ளன. இவ்வாறு சீன அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.