தியான்ஜின்: சீனாவின் தியான்ஜினில் பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், “இரு நாடுகளும் நண்பர்களாக இருப்பது சரியான தேர்வு” என்று கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனாவின் தியான்ஜின் நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், “சீனாவும் இந்தியாவும் கிழக்கில் உள்ள இரண்டு பண்டைய நாகரிகங்கள் ஆகும். நாம் உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் மற்றும் உலகளாவிய தெற்கின் முக்கிய உறுப்பினர்கள் ஆவோம்.
நமது இரு நாட்டு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல், வளரும் நாடுகளின் ஒற்றுமை, புத்துணர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் மனித சமூகத்தின் முன்னேற்றத்தை உருவாக்குதல் ஆகிய வரலாற்றுப் பொறுப்பை நாம் இருவரும் பகிர்ந்து கொள்கிறோம். நல்ல அண்டை மற்றும் நட்பு உறவுகளைக் கொண்ட நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவும் கூட்டாளர்களாகவும், டிராகனும் யானையும் ஒன்றிணைவது இரு நாடுகளுக்கும் சரியான தேர்வாகும்” என்று ஜி ஜின்பிங் கூறினார்.
இந்த சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, “கடந்த ஆண்டு, கசானில் மிகவும் அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தினோம், இதன் மூலம் நமது உறவுகள் நேர்மறையான திசையில் சென்று கொண்டிருக்கின்றன. எல்லையில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட சூழல் உருவாக்கப்பட்டது.
எல்லை மேலாண்மை விஷயத்தில் நமது சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது.
நமது நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன், 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது மனிதகுலத்திற்குத் தேவை. ஷாங்காய் உச்சி மாநாட்டில் சீனாவின் வெற்றிகரமான தலைமைக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். சீனாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்ததற்கும் இன்று எங்கள் சந்திப்புக்கும் நன்றி” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சமீபத்தில், இந்தியாவும் சீனாவும் தங்கள் இருதரப்பு உறவை சீராக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அமெரிக்காவின் 50 சதவீத வரிகள் அமலுக்கு வந்த பிறகு எஸ்சிஓ உச்சிமாநாடு நடப்பதால், இந்த உச்சிமாநாடு இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது.