சீனா – இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை பல தசம காலமாக நீடிக்கும் தொடர்கதையாக இருக்க, இப்போது இன்னொரு வடிவில் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது சீனா.
அது, திபத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ‘யார்லங் ஸாங்போ’ (இந்தியாவில் பிரம்மபுத்திரா) நதியின் குறுக்கே உலகின் மெகா அணையைக் கட்டி எழுப்புவதற்கான தொடக்க விழா. சீனப் பிரதமர் லீ கியாங் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) நடந்துள்ளது. மெகா அணைக்கான தொடக்க விழா குறித்த செய்திகள் சீன அரசு ஊடகங்களில் அதிகாரபூர்வமாக வெளியாக, அது இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு அச்சத்தைக் கடத்தியுள்ளது.
திபெத்தில் பிறந்து இந்தியா வழியாக வங்கதேசம்... – ‘யார்லங் ஸாங்போ’ நதி திபெத்திய பீடபூமியின் வழியாக பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே மெகா அணை கட்டப்பட்டால் கீழ் நதிப் பகுதியில் வாழும் இந்தியா, வங்கதேச மக்கள் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற கவலைகள் எழுந்துள்ளன. இந்தியாவில் நுழைந்ததும் இந்த நதி பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது.
இந்த அணை 167 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டப்படவுள்ளது. ‘மொடுடோ’ நீர்மின் நிலையம் என பெயர் கூட சீனா சூட்டிவிட்டது. இந்த மெகா அணை கட்டப்பட்டுவிட்டால், உலகின் மிகப் பெரிய அணை புதிய சாதனை நிகழ்த்தப்படும். தற்போது, ‘த்ரீ கார்ஜஸ் டேம்’ மூலம் உலகின் மிகப் பெரிய அணையைக் கொண்டிருப்பதும் சீனாதான் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தப் புதிய மெகா அணையைப் பொறுத்தவரையில், ‘த்ரீ கார்ஜஸ்’ அணையில் இருந்து உற்பத்தியாவதைவிட மும்மடங்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது என மதிப்பிடப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திபெத் கிராமப்புற மக்களின் மின் தேவையை உறுதி செய்ய இந்த அணை கட்டுப்படுவதாக சீனா தெரிவிக்கின்றது. ஆனால், நீர்மின் நிலையம் அமைக்கும் சீனாவின் திட்டத்தின் பின்னணியில் பல்வேறு காரணங்களும் இருக்கின்றன.
எதிர்ப்புக்கான காரணங்கள்… – பல்துறை நிபுணர்கள் சீனாவின் இந்த மெகா அணைத் திட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த நதியின் தென் பகுதி இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், அசாம் மாநிலங்களிலும், வங்கதேசத்திலும் பாய்கிறது. இதனால், அதன் குறுக்கே மெகா அணை எழுப்பப்பட்டால் ஏற்படும் தாக்கங்கள் மோசமானதாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
இதே கருத்தை கடந்த 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ‘லோயி இன்ஸ்டிட்யூட்’ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. “திபெத்திய பீடபூமியில் உள்ள நதிகளின் மீது சீனா தனது ஆதிக்கத்தை செலுத்துவது இந்தியப் பொருளாதாரத்தின் மீது அதிகாரம் செலுத்த வழிவகுக்கும்” என்று சுட்டிக்காட்டியது.
கடந்த சில நட்களுக்கு முன்னர் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், “இந்த அணை கட்டப்பட்டால் ஸியாங், பிரம்மபுத்திரா நதிகள் குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போகும். இதனால், அந்த நதியை நம்பியிருக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஏனென்றால் இதனை சீனா நமக்கெதிரான ஓர் ஆயுதமாக பயன்படுத்தும். தண்ணீரை தடுத்து பேராபத்தை விளைவிப்பதால் இதனை ‘வாட்டர் வெடிகுண்டு’ (Water BomB) என்று சொல்லலாம்.
சீனா தான் திட்டமிட்டதுபோல் இந்த மெகா அணையைக் கட்டிவிட்டால், அதிலிருந்து திடீரென அதிகளவில் தண்ணீரை வெளியேற்றினால், ஸியாங் நதி சுற்றுவட்டாரப் பகுதி அழிந்துவிடும். அதனைச் சுற்றி வசிக்கும் ஆதி பழங்குடியினர் தங்கள் நிலம், உடைமைகள் அழிவதை காண நேரும். உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிடும்” என்று கூறியிருந்தார்.
கடந்த ஜனவரி மாதமே, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவரும், “மெகா அணைகள் திட்டத்தால் கீழ் நதிப் பகுதியில் உள்ள தேசங்கள், அதன் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை சீனா உறுதி செய்ய வேண்டும். இந்த அணை கட்டுமானம் தொடர்பாக கீழ் நதிப் பகுதியில் உள்ள நாடுகளுடன் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த எதிர்ப்புக் குரல்கள், கண்டனங்கள், கவலைகளோடு இந்தியா நிறுத்திக் கொள்ளவில்லை. பிரம்மபுத்திரா நதியில் நீர்மின் நிலையம் கட்டுவது பற்றியும் இந்தியா பரிசீலித்து வருகிறது. சீனா மெகா அணையிலிருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றினால், அதனைத் தடுக்க ஒரு பஃபர் அணையாக இதனைக் கட்டமைக்க முயற்சிக்கிறது.
இந்தியா மட்டுமல்ல, சீனாவின் மெகா அணை விவகாரத்தில் வங்கதேசமும் தனது கவலையைப் பதிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதமே மெகா அணை திட்ட விவரத்தை பகிரும்படி சீனாவுக்கு வங்கதேசம் கடிதம் எழுதியது.
இத்தனை சிக்கல்கள் இருக்க, சீன வெளியுறவு அமைச்சகமோ, மெகா அணை கட்டுவது சீனாவின் உரிமை என்று கூறுகிறது. கீழ் நதியில் உள்ள நாடுகளின் மீதான தாக்கங்கள் குறித்து ஏற்கெனவே அலசிவிட்டதாகவும் கூறுகிறது.
மெகா அணையும், மெகா அரசியலும்! – சீனாவின் மெகா அணைத் திட்டம் வெறும் நீர்மின் நிலையத் திட்டம் மட்டுமல்ல, அது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் ஒருபுறம், திபெத் பிராந்தியத்தின் மீதான ஆதிக்கத்தை அதிகரிப்பது இன்னொரு புறம் என மெகா அரசியலாகவும் உள்ளது.
முதலில் மெகா அணை அமையவுள்ள இடமானது, உலகின் மிக ஆழமான, நீளமான நிலப்பரப்பு பள்ளத்தாக்கு. இதில்தான் பிரம்மபுத்திரா நதி ஒரு துல்லியமான யு வடிவ திரும்புதலைக் கொள்கிறது. நம்சா பார்வா மலையை சுற்றியப் பகுதியில் இது நிகழ்கிறது. இவ்வாறு இந்த நதி ‘யு’ வடிவில் வளைந்து திரும்புவதை ‘தி கிரேட் பெண்ட்’ என்றழைக்கின்றனர்.
இந்த இயற்கையில் குறுக்கிட சீனா திட்டமிட்டுகிறது. நம்சா பார்வா மலைகளில் 20 கிமீ நீளத்தில் குகைகளைக் குடைந்து அதன் வழியாக பிரம்மபுத்திரா நீரை திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது. பொறியாளர்கள் முதல் பணியாக இந்த குகைப் பாதை அமைக்கும் பணியை மேற்கொள்கிறார்கள். குகைப் பாதையின் மூலம் ஐந்தடுக்கு மின் நிலையத்துக்குத் தேவையான தண்ணீர் திருப்பி விடப்படும்.
இந்த நீர்மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் திபெத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பிற பகுதிகளின் தேவைக்காக மடைமாற்றப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக சீனாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள மெட்ரோ நகரங்கள் மின் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் சூழலில் அப்பகுதிகளுக்கு இந்த மின்சாரம் பயனளிக்கும் என்று சீனா கருதுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் இந்த மின் திட்டத்தை வரவேற்கிறார். இத்திட்டத்துக்கு ‘ஸிடியாங்டாங்ஸோங்’ என்று நாமகரம் செய்துள்ளார். இதற்கு, ’மேற்கே உற்பத்தியாகும் மின்சாரத்தை கிழக்குக்கு அனுப்புவது’ என்று அர்த்தமாம்.
சீன அரசாங்கமும், அரசு ஊடகமும் இந்த நீர் மின்திட்டம் தூய்மையான எரிசக்தியை நல்கும், திபெத்திய கிராமப்புற பகுதிகளுக்கு மின்சார தன்னிறைவு தரும் என்று விதந்தோதுகின்றன.
ஆனால், சுழலியல் செயற்பாட்டாளர்கள், இது திபெத் நிலத்தையும், திபெத்திய மக்களையும் சுரண்டும் செயல் என்று சீனாவை விமர்சிக்கின்றனர். இந்த நீர்மின் நிலையத்திட்டத்துக்கு பிரம்மபுத்திரா நதியின் கீழ்ப் பகுதி தேசங்களான இந்தியா, வங்கதேசம் எதிர்ப்பதற்கு முன்னதாகவே திபெத்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர். எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்கள் அடி, உதை, கைது என்று துன்புறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
இதையும் தாண்டி சூழலியல் ஆர்வலர்களின் இன்னொரு அக்கறை, இந்த மெகா அணை அமையும் பகுதி நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பகுதி. அப்படி இருக்கையில் அங்கே மெகா அணை அமைப்பது நிலநடுக்கம் ஏற்பட்டால் ஊகிக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். கூடவே, திபெத்திய பள்ளத்தாக்குகள் பல்லுயிர் பெருக்கத்துக்கு பெயர் பெற்றவை, அங்கே மெகா அணை அமைப்பது பல்வேறு சீரழிவுகளை இயற்கை வளங்களுக்கு ஏற்படுத்தும் என்று கணிக்கின்றனர்.
திபெத் நிலப்பரப்பு அரசியலைப் போல இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தவும் சீனா மெகா அணை திட்டத்தை கையிலெடுத்துள்ளது. அருணாச்சல் முதல்வர் குறிப்பிட்டதுபோல் இது ஒரு ‘வாட்டர் வெடிகுண்டு’ திட்டம்தான்.
போரை நவீன காலத்தில் களத்தில் ஆயுதங்களோடு மோதுவது மட்டுமல்லாது, பயோ வார்ஃபேர், வாட்டர் வார்ஃபேர் என்றெல்லாம் நடத்தலாம் என்பதை அவ்வப்போது சில தேசங்கள் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மெகா அணை ஓர் எச்சரிக்கை மணி!