நியூயார்க்: அமெரிக்கன் ஈகிள் ஆடை நிறுவனத்தின் ஜீன்ஸ் விளம்பரத்தில் தோன்றியிருந்த நடிகை சிட்னி ஸ்வீனியை ஆதரித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவு மூலம் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் பாராட்டி உள்ளார்.
கடந்த மாதம் வெளியான சிட்னி ஸ்வீனியின் ஜீன்ஸ் விளம்பரம், அமெரிக்க நாட்டில் பேசு பொருளாகி உள்ளது. இதில் அவருக்கு எதிரான கருத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் அதிபர் டொனால்டு ட்ரம்ப், சிட்னி ஸ்வீனியை ஆதரித்துள்ளார்.
“குடியரசு கட்சியை சேர்ந்த சிட்னி ஸ்வீனியின் கவர்ச்சியான விளம்பரம் வெளியாகி உள்ளது. இது அமெரிக்கன் ஈகிள் நிறுவனத்துக்கானது. இதன் மூலம் ஜீன்ஸ் விற்பனை அமோகம் அடைந்துள்ளது.
மறுபக்கம் பார்த்தால் ஜாகுவார் மோசமான விளம்பரம் ஒன்றை மேற்கொண்டது. அதனால் அந்த நிறுவனம் பில்லியன் டாலர்களை இழந்துள்ளது, முதலீடு சரிந்துள்ளது, சிஇஓ பதவி விலகியுள்ளார்” என தனது பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார். இதில் பாப் இசை பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட்டையும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
‘Sydney Sweeney Has Great Jeans’ என்ற டேக் லைனுடன் இந்த ஜீன்ஸ் விளம்பரம் வெளியாகி உள்ளது. இது ஜீன்ஸ் ஆடை மற்றும் ஜீன்கள் (மரபணு) ஆகிய ஒப்பொலியுடன் ஒப்பிடப்பட்டு விவாதமாகி உள்ளது. எதிர்ப்புகள் அதிகரித்திருந்தாலும் தொடர்ந்து அமெரிக்கன் ஈகிள் நிறுவனம் இந்த விளம்பரத்தை புரமோட் செய்து வருகிறது. இதன் மூலம் பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 24 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.