சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களை பாராட்டிய அந்நாட்டு அதிபர், வரும் 3-ம் தேதி விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் கட்டோங் சாலையின் ஒரு பகுதி கடந்த ஜூலை 26-ம் தேதி திடீரென உள்வாங்கியது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கார் அந்த பள்ளத்துக்குள் விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த பிச்சை உடையப்பன் தலைமையிலான 7 தமிழர்கள் அந்த பள்ளத்தில் எட்டிப் பார்த்துள்ளனர். சகதியாக இருந்த அந்த பள்ளத்தில் ஒரு பெண் காரிலிருந்து வெளியில் வந்துள்ளார்.
இதையடுத்து, அவரை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, ஒரு நைலான் கயிறை விட்டு அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், அந்தப் பெண்ணை மீட்ட தமிழர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதனிடையே, அந்த 7 பேருக்கும் பாராட்டு தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினம், வரும் 3-ம் தேதி தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது 7 பேருடன் அதிபர் உரையாடு
வதுடன் அவர்களுக்கு விருந்து அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
பிச்சை உடையப்பன் சுப்பையா (47), வேல்முருகன் முத்துசாமி (27), பூமாலை சரவணன் (28), கணேசன் வீரசேகர் (32), போஸ் அஜித் குமார் (26), நாராயணசாமி மாயகிருஷ்ணன் (25) மற்றும் சாத்தபிள்ளை ராஜேந்திரன் (56) ஆகியோர்தான் அந்தப் பெண்ணை மீட்டனர்.
இதனிடையே, அந்த 7 பேருக்கும் 1,639 பேர் 72,241 சிங்கப்பூர் டாலரை பரிசாக வழங்கி உள்ளனர் என அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொண்டு நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.