வாஷிங்டன்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் வலதுசாரி செயற்பாட்டாளர் சார்லி கிர்க்கின் துக்க நிகழ்வில் சந்தித்தனர்.
அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வலதுசாரி செயற்பாட்டாளர் சார்லி கிர்க் (31) செப்டம்பர் 10 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். கிர்க்கை கொலை செய்ததாக 22 வயது டைலர் ராபின்சனை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தனது கணவனை கொன்றவரை மன்னிப்பதாக கிர்க்கின் மனைவி அறிவித்துள்ளார்.
‘டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ’ நிறுவனத்தின் இணை நிறுவனரான சார்லி கிர்க், ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பராகவும், தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அவர் இருந்தார்.
இந்த நிலையில், அரிசோனாவின் க்ளென்டேலில் உள்ள ஸ்டேட் ஃபார்ம் மைதானத்தில் நடந்த வலதுசாரி ஆர்வலரான சார்லி கிர்க்கின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக, அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்டா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் அருகருகே அமர்ந்து சிறிது நேரம் பேசினர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு, தொழிலதிபர் எலான் மஸ்க் முழு ஆதரவு அளித்தார். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அதன்பிறகு அரசு செயல் திறன் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அதிபரின் சிறப்பு ஆலோசகராகவும் அவர் செயல்பட்டார்.
இந்தச் சூழலில் அதிபர் ட்ரம்ப் அறிமுகம் செய்த “பிக் பியூட்டிஃபுல் பில்” என்ற மசோதாவை எலான் மஸ்க் மிகக் கடுமையாக எதிர்த்தார். இதன் காரணமாக ட்ரம்ப் அரசின் பதவியில் இருந்து விலகிய அவர், அதிபர் ட்ரம்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கருத்துகளையும் வெளியிட்டார். ட்ரம்ப்பும் எலான் மஸ்கை கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து புதிய கட்சியை தொடங்கப் போவதாகவும் மஸ்க் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், சார்லி கிர்க்கின் இறுதி நிகழ்வின்போது இருவரும் சந்தித்துள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட எக்ஸ் பதிவில், சார்லி நினைவு நிகழ்ச்சிக்காக இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதேபோல எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், ட்ரம்ப்புடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘சார்லிக்காக’ எனப் பதிவிட்டுள்ளார்.