இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷவுகத் அலி, நேற்று (செப். 19) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ரியாத் நகரில் கடந்த 17-ம் தேதி பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில், பாகிஸ்தான் சார்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் சவூதி அரேபியா சார்பில் அதன் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் கையெழுத்திட்டனர். எந்த ஒரு நாட்டுக்கு எதிரான எந்த ஒரு ஆக்கிரமிப்பும் இருவருக்கும் எதிரான ஆக்கிரமிப்பாகக் கருதப்படும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது. இது தற்காப்புக்கானது மட்டுமே. வேறு எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. வேறு எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக இது தாக்கங்களை ஏற்படுத்தாது.
இரு நாடுகளின் தலைமையும் இரு தரப்பு உறவுகளை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதில் உறுதியாக உள்ளன. இஸ்லாத்தின் புனித தலங்களைக் கொண்ட சவுதி அரேபியா உடனான பாகிஸ்தானின் உறவு என்பது பல பத்தாண்டுகளாக இருக்கக்கூடியது. பகிரப்பட்ட நம்பிக்கை, மூலோபாய நலன்கள், பொருளாதார சார்பு ஆகியற்றில் இந்த உறவு வேரூன்றியுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இரண்டு புனித மசூதிகள் மீது பாகிஸ்தான் மக்கள் ஆழமான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பின் தனித்துவமான பிணைப்பைக் கொண்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது கடந்த 1960களில் தொட்டே இருந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
தோஹாவில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சிமாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் பங்கேற்றன. இதில், இஸ்ரேல், காசா மீது நடத்தும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் பொறுப்புடணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷவுகத் அலி தெரிவித்துள்ளார்.