ரஷ்யாவின் சில பகுதிகளில் டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தைகளை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ரஷ்யாவின் 10 மாகாணங்களில் இந்தப் புதிய திட்டம் கடந்த சில மாதங்களாகவே அமலில் உள்ளது. இது உள்நாட்டிலும், உலக அரங்கிலும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
ரஷ்ய அதிபரின் உத்தரவின் பேரிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதற்கான எதிர்ப்புக் குரல் உடனுக்குடன் நசுக்கப்பட்டு விடுவதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது. மேலும், ரஷ்ய மக்கள் தொகை குறைந்துவருவதால், அதை ஈடுகட்டவே இந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எப்படிக் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்தத் திட்டத்தின் பின்னணி பற்றி அலசுவோம்.
பின்னணி என்ன? – கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யா, அதிக குழந்தை பெற்றெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. ஆனால், தாய்மை அடையும் வயதை எட்டிய பெண்களுக்கு மட்டுமே அந்தச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த முறை டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றெடுக்குமாறு ரஷ்யா ஊக்குவித்து, அதற்கு ரூ.1 லட்சம் (இந்திய மதிப்பில்) வரை தருகிறது.
ரஷ்ய நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்களின்படி 2023-ல் ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.41 சதவீதமாக இருந்தது. இது மக்கள் தொகை சமநிலையைப் பெறுவதற்கு தேவையான 2.05%-ஐ விட மிக மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில்தான் ரஷ்யாவில் டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக்கொள்வது ஊக்குவிக்கப்படுகிறது. இது குறித்து அந்நாட்டில் இயங்கும், மக்கள் மனநிலையை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 43% மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராகவும், 40% மக்கள் இதற்கு உறுதுணையாகவும் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. ஆதரவுக்கும், எதிர்ப்புக்கும் பெரிய வித்தியாசமில்லாததால் இயல்பாக அரங்கேறி வருகிறது இளம் மாணவிகள் தாயாகும் போக்கு.
புதினின் பார்வை: ரஷ்ய அதிபர் புதின், மிக வலுவான மக்கள் தொகையே, வல்லரசு வளமாகக் காரணமாகும் என்று நம்புபவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மக்கள்தொகை அதிகமாக இருந்தால், பரந்துபட்ட நிலபரப்பின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும், ராணுவமும் ஆள் பலம் பெறும் என்று புதின் தீவிரமாக நம்புகிறார். அந்த வகையில் ரஷ்யாவின் நிலபரப்பை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே, உக்ரைன் நிலபரப்பை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்ற புதினினும் திட்டமும், நாட்டின் மக்கள் தொகை சுருங்கி வருவதால் ஆபத்தான நிலையில் இருக்கிறது.
மக்கள் தொகை சரிவது ஒரு பக்கம், போரில் உயிர்நீத்த ரஷ்ய படைவீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மறுபக்கம் என ரஷ்யா நெருக்கடியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தோராயமாக 2,50,000 ரஷ்ய வீரர்கள் போரில் உயிரிழந்தனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ரஷ்யப் படைகளில் இருந்து சில இளைஞர்கள் உயிர்பிழைத்தால் போதுமென்று தப்பித்தும் வருகின்றனர்.
ரஷ்யா மட்டுமல்ல… – ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் குறைந்துவரும் மக்கள் தொகை காரணமாக இருந்தாலும் கூட, இது ரஷ்யாவின் பிரச்சினையாக மட்டுமல்லாது உலகின் பரவலான போக்காகவும் இருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில், 2050-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறையும் வாய்ப்புள்ளது என்ற கணிப்புகளும் நிலவுகின்றன.
அந்த வகையில் மக்கள் தொகை அதிகரிப்புக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தது புதின் மட்டுமே இல்லை எனத் தெரிகிறது. ‘ப்ரோநேட்டலிஸ்ட் பாலிசீஸ்’ என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ‘குழந்தைப் பேறை ஊக்குவிக்கும் கொள்கைகளை’ வகுத்த நாடுகளில் ஹங்கேரி, போலந்து, அமெரிக்கா இன்னும் சில நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
ஹங்கேரி அரசு மூன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொண்டால் மிக தாராளமான வரிச் சலுகை தருகிறது. போலந்து அரசு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித் தொகை தருகிறது. ஒரு குழந்தைக்கு இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் வீதம் உதவித் தொகை தரப்படுகிறது. தொழில், வேலை முன்னேற்றத்தை தியாகம் செய்து பெண்கள் குழந்தைப்பேறுக்கு சம்மதம் தெரிவிப்பதால் இந்தப் பெரிய சலுகையை வழங்குகிறது.
அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ஆக்க வேண்டும் என்ற ‘எம்ஏஜிஏ’ (MAGA) கொள்கையோடு ஆட்சி அமைத்துள்ள ட்ரம்ப், குழந்தைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க 5,000 டாலர் வரை பெண்களுக்குத் தரலாம் என்ற யோசனையை முன்மொழிந்ததும் நினைவுகூரத்தக்கது.
ஸ்பெயின் முன்மாதிரி… – குறைந்துவரும் மக்கள் தொகையை மீட்டெடுக்க சில நாடுகள் இதுபோன்ற நிதி, வரிச் சலுகைகளை மட்டுமே அறிவிக்க, ஸ்பெயின் நாடு தனது சற்றே வித்தியாசமான அணுகுமுறையால் சாதித்துள்ளது.
ஸ்பெயினும் குழந்தை பெற்றெடுக்க பெண்களை ஊக்குவித்தலும் கூட, அதையும் தாண்டி தனது நாட்டுக்கு குடியேறிகளாக வந்தவர்களுக்கு குடிமக்கள் அந்தஸ்து வழங்குவதை அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக சட்டவிரோதக் குடியேறிகளுக்கும் கூட இந்தச் சலுகையை தாராளமாக வழங்குகிறது. ஸ்பெயினின் இந்த நடவடிக்கைக்கு கைமேல் பலனாக, அதன் பொருளாதாரம் முன்பைவிட வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ப்ரோநேட்டலிஸ்ட் கொள்கைகளில் புதுமைகளையும், தாராளத்தையும் சில தேசங்கள் காட்டினாலும் கூட ஒரு குறிப்பிட்ட சில குழு, இனம் சார்ந்த பெண்கள் அதிகமாகப் பிள்ளை பெறுவதை இந்த நாடுகள் ஊக்குவிக்கின்றன. இவர்களை ‘விருப்பத்தக்குரிய குடிமக்களாக’ அந்த நாடுகள் கருதுகின்றன. அதாவது இனம், மொழி, மதம், பாலின சார்பு சார்ந்து சிலரை அரசாங்கம் விரும்புகிறது.
ஸ்பெயின் நாடு குடியேறிகளை தாராளமாக வரவேற்று தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்கினாலும் கூட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் ஸ்பானிஷ் மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. ஹங்கேரி நாடு ஆண் – பெண் (ஹெட்டரோ செக்ஸுவல்) தம்பதிக்கு மட்டுமே இந்தச் சலுகையை தருகிறது. அதுவும் அவர்கள் அதிக வருவாய் ஈட்டும் வர்க்கத்தில் இருக்கிறார்களா என்பதையும் கருத்தில் கொள்கிறது.
உலக நாடுகளின் இந்த ‘விருப்பத்துக்குரிய குடிமக்கள்’ போக்கை ட்ரம்ப்பின் செயல்பாடு மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம். பெண்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்காக ஊக்கத் தொகைகளை வழங்கத் தயாராக இருக்கும் ட்ரம்ப், சட்டவிரோத குடியேறிகளை அப்புறப்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் மிகமிக உறுதியாக இருக்கிறார். ட்ரம்ப்புக்கு அமெரிக்க மக்கள்தொகை அதிகமாக வேண்டும். ஆனால் அவர்கள் அமெரிக்கர்களாக இருக்க வேண்டும்.
ஸ்டாலின் உத்தியை கையிலெடுத்த புதின்: மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவிக்க ரஷ்ய அதிபர் புதின், அந்தக் காலத்தில் ரஷ்யாவின் அடையாளமாக இருந்த ஜோசப் ஸ்டாலினின் உத்தியை கையில் எடுத்துள்ளார். 10 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்க்கு ஸ்டாலின் காலத்தில் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. அதையே இப்போது புதினும் பின்பற்றுகிறார். மேலும், ரஷ்யாவில் குழந்தைப் பேறுக்கு எதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் தடை செய்து சட்டமே இயற்றப்பட்டுள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஒரு பெண் முடிவெடுக்க முடியாது.
பெண்களின் கணக்கு: மக்கள் தொகை பெருக்கத்துக்கு உலக நாடுகள் விதவிதமாக, ரகரகமாக கொள்கைகளை வகுக்க, அதை பெண்களின் நலனை அடகுவைத்து மேற்கொள்ளாது, சமூகத் தேவையின் அடிப்படையில் வகுக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானது உழைக்கும் சக்தி. அதனை மக்கள் தொகை பெருக்கத்தினால் மட்டுமே அதிகரிக்க நினைக்காமல், குடியேறிகளுக்கு குடிமக்கள் அங்கீகாரம் வழங்கலாம் என்று பெண்கள் கருதுகின்றனர். அதை விடுத்து, நாட்டிலுள்ள பெண்களை இத்தனை குழந்தை பெற்றெடுங்கள், இந்த மதத்தை, இனத்தை, குலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக குழந்தை பெற்றெடுங்கள் என்று நிர்பந்திப்பது பெண்களின் தனிப்பட்ட உரிமைகளை அத்துமீறுவதாகவும், அரசாங்கம் விரும்பும் வகையில் மக்கள் தொகையை பெருக்கும் ஒருவகையிலான இன அல்லது மதவாதமாகவும் மட்டுமே இருக்கும் என்று கண்டனத்தைப் பதிவு செய்கின்றனர்.
உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன்