வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் சமீபத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, டொனால்டு ட்ரம்ப்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக கிரிமியா, நேட்டோ மறந்துவிட்டால் போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியம் என்று ஜெலன்ஸ்கிக்கு ‘செக்’ வைத்துள்ளார் ட்ரம்ப்.
கிரிமியா ஏன் உக்ரைனுக்கு முக்கியம்? – 1971-ல் சோவியத் யூனியன் உடைந்தபோது உருவான நாடுதான் உக்ரைன். அப்போது கிரிமியா உக்ரைனின் ஒரு பகுதியானது. கிரிமியாம் உக்ரைன் நாட்டின் ஒரு தீபகற்ப பகுதியானது. எல்லை ரீதியாக உக்ரைனுடன் இருந்தாலும், அங்கே ரஷ்யர்களே அதிகமாக இருந்தனர். அதனால் ரஷ்ய இனக் குழுக்களுக்கும், உக்ரைன் இனக் குழுக்களுக்கும் இடையே புகைச்சல் இருந்தது.
மேலும், ரஷ்ய ஆட்சியாளர்களும் கிரிமியா ரஷ்யாவுடைய பிராந்தியம் என்று தொடர்ச்சியாகக் கூறி அந்தப் புகைச்சலுக்கு வலு சேர்த்துக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில், ரஷ்யா கடந்த 2014-ம் ஆண்டு இதை தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இது உக்ரைனுக்கு பேரிழப்பானது.
கிரிமியாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் அதிகமாக உள்ளன. மேலும் இது ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. கிரிமியாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் மூலம், ரஷ்யா கருங்கடலில் தனது ராணுவ இருப்பை பலப்படுத்தியுள்ளது. அதேவேளையில் உக்ரைனுக்கு சுற்றுலா மூலம் வந்த வருமானம் தடைபட்டது.
இயற்கை வளங்கள், ராணுவ முக்கியத்துவம், சுற்றுலா வருமானம் என மூன்று விஷயங்கள் உக்ரைனுக்கு பறிபோனது. அது மட்டுமல்லாது இன, கலாச்சார ரீதியாகவும் கிரிமியா உக்ரைன் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதனாலேயே, “கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்துக் கொண்டது. அது எங்களின் பிராந்தியம். அதை மீட்டெடுக்க வேண்டும்,” என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தீவுப் பகுதியான கிரிமியாவையும், ரஷ்யாவையும் நேரடியாக இணைக்க 19 கி.மீ. தூரம் கொண்ட ஒரே ஒரு பாலம் மட்டுமே உள்ளது. இதுவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினால் அமைக்கப்பட்டது. இந்தப் பாலத்தில் சாலை மற்றும் ரயில் என இரு தனித்தனி பாதைகள் உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்ய ராணுவம் இந்த பாலத்தின் வழியாகத்தான் உக்ரைனுக்குள் முதல் முறையாக ஊடுருவியது என்பது குறிப்பிடத்தக்கது. போர் மூண்ட சில நாட்களிலேயே உக்ரைன் இந்தப் பாலத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால், அதனை உடனடியாக ரஷ்யா சரி செய்தது.
நிலைமை இவ்வாறாக இருக்க, கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே அங்கீகரிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவருகிறார். ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு உக்ரைன் நிச்சயமாக உடன்படாது என்றே கணிக்கப்படுகிறது. மேலும், ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாடு, ரஷ்ய ஆதரவுப் போக்கு என்றும் விமர்சிக்கப்படுகிறது. பல காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக கிரிமியா இருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாடு போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்காது, மாறாக ஒரு புதிய சிக்கலுக்கே வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
நேட்டோவை எதிர்க்கும் ரஷ்யா – நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949-இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர்ந்து இயங்க வேண்டும்.
அந்த வகையில், உக்ரைனை நேட்டோவில் உறுப்பு நாடாக இணைத்தால், ரஷ்யாவிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பது உக்ரைனின் கணக்கு.
1990-களில் இருந்தே உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணக்கம் காட்டி வந்தாலும் கூட 2014-ல் உக்ரைனில் அமைந்த ஆட்சி, முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ஆட்சி. அந்த ஆட்சி உக்ரைனை நேட்டோவுடன் இணைப்பதில் அதி தீவிரம் காட்டியது. இதுதான் ரஷ்யா – உக்ரைன் போருக்கான மிக முக்கிய புள்ளி என்றாலும் அது தகும்.
ஏனெனில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அங்கே அமெரிக்காவின் கை ஓங்கும், அது நமக்கு பேராபத்து என்று கருதியது ரஷ்யா. இதனாலேயே ரஷ்யா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ட்ரம்ப் வைத்த செக்-கும்; ஜெலன்ஸ்கி எதிர்வினையும் – இந்தச் சூழலில், ஜெலன்ஸ்கியை சந்திக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் புயலைக் கிளப்பும் பதிவொன்றை பதிவிட்டுள்ளார் டொனால்டு ட்ரம்ப்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில், “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லை போரை தொடர்ந்து நடத்த அவர் விரும்பினால், அவர் போராடலாம். இந்தப் போர் எப்படி தொடங்கியது என்பதை நினைத்துப் பாருங்கள். நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கக் கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது.
அதேபோல் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிமியாவை ஓர் அமைதி ஒப்பந்தம் மூலம் ரஷ்யாவுக்கு வழங்கினார் ஒபாமா. அதை மாற்றமுடியும் என்று உக்ரைன் நினைக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “கிரிமியாவை ரஷ்யாவுக்கு தாரை வார்த்தது போன்ற மாஸ்கோவுக்கான சலுகைகள் புதினை வலுப்படுத்தியுள்ளது. கிரிமியா இழப்பின் விளைவாக, அதன் பின்னர் இன்னும் சில கிழக்குப் பிராந்தியங்கள், அப்புறம் டான்பாஸை இழந்தோம். இவை புதுப்புதுத் தாக்குதல்களை எங்களை நோக்கி ஏவ புதினுக்கு புதிய உத்வேகம் தருகிறது. உக்ரைனுக்கு வாய் வார்த்தைகளாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் பலிக்கவில்லை. நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம். கூடவே, அது நீடித்த அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
கிரிமியாவை ரஷ்யாவுக்கு தாரை வார்த்திருக்கக் கூடாது. நாங்கள் இப்போது கீவ், ஒடேஸா, கார்கிவ் பகுதிகளும் அவ்வாறு ரஷ்யாவிடம் சென்றுவிடக் கூடாது என்றே போராடுகிறோம். நாங்கள் எங்களது சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம்” என்றார்.
இத்தகைய சூழலில் ரஷ்யாவுக்கு உக்ரைன் பணிய வைக்கப்படுமா இல்லை நேட்டோ உறுப்பு நாடுகள் சில ட்ரம்ப்பின் திடீர் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் மாற்றம் வருமா என்பது இன்றைய சந்திப்புக்குப் பின்னர் தெரியவரக் கூடும்.