கான் யூனிஸ்: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று வான் வழி தாக்குதல் நடத்தியது.
இதில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக காசா பொதுமக்கள் பாதுகாப்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் மமுத் பசல் தெரிவித்துள்ளார். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அல் ஜசீரா வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் தாக்குதலில் எங்கள் புகைப்பட கலைஞர் முகமது சலமா உயிரிழந்தார். இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது. இதுபோல, அசோசியேட்டடு பிரஸ் பகுதிநேர செய்தியாளர் மரியம் டக்கா என்பவரும் உயிரிழந்துள்ளார். இஸ்ரேல், காசா இடையிலான போரில் கடந்த 2 ஆண்டுகளில் 200 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.