சென்னை: “காசாவில் நடக்கும் பிரச்சினைக்கு பிரதமர் மோடிதான் காரணம் எனச் சொல்லி மிகவும் கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “காசாவில் நடக்கும் பிரச்சினைக்கு பிரதமர் மோடிதான் காரணம் எனச் சொல்லி மிகவும் கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி பேசுபவர்களெல்லாம், பிரதமர் மோடியின் அருகில் கூட வர முடியாது. அவர்களது பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அவர்கள் எங்கு சென்றார்கள். கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தார்களே அப்போது எங்கே போனார்கள்? இதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. ஆணவப் படுகொலை நடக்கும்போது அதைப் பற்றி பேச ஆள் இல்லை. முன்பு அடுத்த மாநிலத்தை பற்றி பேசி கொண்டிருந்தார்கள். இப்போது அடுத்த நாட்டை பற்றி பேச போய்விட்டார்கள். முதலில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும், மக்கள் விரோத பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
காங்கிரஸை திமுகதான் அடிமைப்படுத்தி வைத்துள்ளது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கவில்லை எனில், கூட்டணியில் இருந்து வெளியே வருவோம் என சொல்லும் அளவுக்கு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு துணிச்சல் இருக்கிறதா?
தேர்தல் நெருங்க நெருங்க தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பெரும். இண்டியா கூட்டணியில் நிச்சயம் பிரச்சினை வரும். அவர்களால் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க முடியாது. தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே, விஜய்யின் தாக்குதல் என்பது திமுக மீது மட்டுமே இருக்கட்டும். அவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் விஜய்யின் பங்கும் இருக்க வேண்டும்” என்று தமிழிசை கூறினார்.
முன்னதாக, காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. புதுப்பேட்டை லேங்க்ஸ் தோட்டச் சாலையில் தொடங்கிய பேரணி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்எச் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் பேசியது குறிப்பிடத்தக்கது.