புதுடெல்லி: காசாவில் திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பத்திரிகையாளர்களும் அடங்குவர். இதற்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அங்குள்ள நஸர் மருத்துவமனையில் இன்று (ஆக.25) மட்டும் இரண்டு முறை தாக்குதல் நடந்துள்ளதாக காசாவில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. முதலில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை கொண்டு ட்ரோன் தாக்குதலும், பின்னர் ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டதாக தகவல்.
“முதலில் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விரைந்த நேரத்தில் அடுத்த தாக்குதல் நடந்தது” என நஸர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவ பிரிவின் தலைமை மருத்துவர் அகமது அல்-ஃபரா கூறியுள்ளார்.
அசோஸியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளர் மரியம், அல்-ஜசீராவின் ஒளிப்பதிவாளர் முகமது சாலமா, ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஹுசம் அல் மஸ்ரி, பாலஸ்தீனத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் மோசஸ் அபு தாஹா, அஹமது அபு அஸீஸ் ஆகியோர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதனை அவர்கள் பணியாற்றி வரும் பத்திரிகை நிறுவனம் உறுதி செய்துள்ளது. கடந்த 22 மாத கால இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் சுமார் 200 பத்திரிகையாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. பத்திரிகையாளர்கள் மீது குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. தாக்குதல் நடந்த மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பு இயங்கி வருவதாக இதற்கு முன்பு இஸ்ரேல் குற்றச்சாட்டு வைத்திருந்தது. இருப்பினும் அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ட்ரெச்சர்கள் தாக்குதலில் காயமடைந்த நபர்களை மீட்டு வர பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர்கள், நோயாளிகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பணியாற்றவே அச்சமாக உள்ளது என தாக்குதலை கண்ணெதிரே பார்த்த நஸர் மருத்துவமனையில் பணியாற்றும் பிரிட்டன் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது. அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.