கம்போடியா, தாய்லாந்து இடையிலான போர் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்பிலும் சமரசத்தை உருவாக்க தாய்லாந்து மற்றும் கம்போடியத் தலைவர்கள் இன்று மலேசியாவில் சந்திக்கின்றனர்.
கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் ஆகியோர் இன்று (ஜூலை 28) பிற்பகல் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் தலைவராக மலேசிய பிரதமர் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. மோதல்களைத் தொடங்கியதற்காக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். 5-வது நாளாக நீடிக்கும் இந்த போரில் இருதரப்பிலும் இதுவரை 35 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 2,60,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்த்துள்ளனர். இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப பெற்றதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நேரடி அழுத்தத்தைத் தொடர்ந்து கம்போடியா – தாய்லாந்து இடையே இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. மோதல் தொடர்ந்தால் அமெரிக்கா இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடராது என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கோலாலம்பூருக்குப் புறப்படுவதற்கு முன், பாங்காக்கில் செய்தியாளர்களிடம் பேசிய தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம், “இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் சீன பிரதிநிதிகளும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வார்கள். உடனடி போர் நிறுத்தத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படும். கம்போடியா மீது நம்பிக்கை இல்லை என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். அவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையாக இல்லை” என்றார்.