ஒட்டாவா: காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனின் கூட்டாளி இந்தர்ஜித் சிங் கோசல் உட்பட 3 காலிஸ்தான் தீவிரவாதிகளை கனடா காவல்துறை கைது செய்துள்ளது. கனடா பாதுகாப்பு ஆலோசகர் நாத்தலி ட்ரோயின், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசிய சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபை சீக்கியர்களுக்கான தனி நாடாக உருவாக்க காலிஸ்தானி அமைப்பு முயன்று வருகிறது. இதற்காக இயங்கி வரும் நீதிக்கான சீக்கியர்கள் (Sikhs for Justice) அமைப்பு அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்தவாறு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுன், இந்த அமைப்புக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், குர்பத்வந்த் சிங் பன்னுனின் கூட்டாளி இந்தர்ஜித் சிங் கோசல் (36), ஜக்தீப் சிங் (41), அர்மான் சிங் (23) ஆகிய மூன்று பேரை கடந்த 19-ம் தேதி கைது செய்தனர். கவனக்குறைவாக துப்பாக்கியைப் பயன்படுத்தியது, ஆபத்தான நோக்கத்துக்காக ஆயுதம் வைத்திருந்தது, மறைத்து வைக்கப்பட்ட ஆயுதத்தை எடுத்துச் சென்றது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் ஒட்டாவாவில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். மூவரிடமும் முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குர்பத்வந்த் சிங் பன்னுவின் வலது கரமான இந்தர்ஜித் சிங் கோசல், கனடாவில் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் முக்கிய அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவர், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கடந்த 2024, நவம்பரில் கைது செய்யப்பட்டார். எனினும், நிபந்தனைகளின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.
சீக்கிய பிரிவினைவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா – கனடா இடையே ராஜதந்திர உறவு பாதிப்படைந்தது. இதையடுத்து, இருதரப்பு உறவுகளை சரி செய்யும் நோக்கில் கனடாவின் பாதுகாப்பு ஆலோசகர் நத்தலி ட்ரூயின் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.