ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தானி தீவிரவாத குழுக்கள் செயல்படுவதை அந்நாட்டு அரசின் நிதித்துறை ஒப்புக்கொண்டுள்ளது.
அதிக அளவில் நடக்கும் பணமோசடி, தீவிரவாத நிதி அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த புதிய அறிக்கை (2025-ம் ஆண்டு அறிக்கை) ஒன்றை கனடா அரசின் நிதித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாத அமைப்புகள் குறித்தும் அவை திரட்டும் நிதி குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கனடாவில் ஹமாஸ், ஹிஸ்புல்லா, காலிஸ்தான் தீவிரவாத குழுக்களான பாப்பர் கல்சா இன்டர்நேஷ்னல், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள், கனடாவில் நிதி உதவி பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள், கனடாவில் அரசியல் ரீதியில் வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த குழுக்கள் முன்பு, கனடாவில் வரிவான அளவில் நிதி திரட்டும் வலையமைப்பைக் கொண்டிருந்தன. தற்போது, அந்த அமைப்புகளின் நோக்கத்துக்கு விசுவாசமாக உள்ள தனிநபர்கள் சிலரைக் கொண்ட குழுக்களாக அவை சுருங்கியுள்ளன. எனினும், எந்த ஒரு குழுவும் மற்றொரு குழுவுடன் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு தொடர்பில் இல்லை.
காலிஸ்தானி தீவிரவாத குழுக்கள், லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்காக புலம்பெயர்ந்த சீக்கியர்களிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்றுள்ளன. எனினும், அவற்றின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வரவு செலவு திட்டங்களில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே. இத்தகைய அமைப்புகள் குற்றச் செயல்களில் ஈடுபட அவர்களுக்கு இருக்கும் நிதி ஆதாரம் மிக முக்கிய காரணியாக உள்ளது.
வங்கித்துறை துஷ்பிரயோகம், கிரிப்டோகரன்சி பயன்பாடு, அரசு நிதி உதவி, தொண்டு நிறுவன நிதி உதவி, குற்றச்செயல்கள் மூலம் ஈட்டும் நிதி உதவி போன்றவை இந்த குழுக்களுக்கு நிதி வரும் வழிகளாக உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல அமைப்புகளைக் கொண்டுள்ள காலிஸ்தானி இயக்கம், பஞ்சாபில் காலிஸ்தான் என்ற சுதந்திர, இறையாண்மை கொண்ட தனி நாட்டை நிறுவ முயல்கிறது. கனடாவில் இயங்கும் காலிஸ்தானி இயக்கம் தொடர்பாக இந்தியா அந்நாட்டிடம் பல முறை தனது கவலையை தெரிவித்துள்ளது. எனினும், கனடா நீண்ட காலமாக அதனை புறக்கணித்து வந்தது. இதன் காரணமாகவே, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது.
கனடாவின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2023-ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு இந்தியா மீது குற்றம் சாட்டினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டு இது என இந்தியா நிராகரித்தது. இதையடுத்து, இந்தியா தனது தூதர்களை திரும்பப் பெற்றது.
இந்நிலையில், கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவின் கவலைகளை நிவர்த்தி செய்ய உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, இருதரப்பு உறவு மேம்படத் தொடங்கியது. கனடாவில் காலிஸ்தானி குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை அந்நாடு இதுவரை எடுக்கவில்லை. எனினும், இரு நாடுகளும் தங்கள் தூதர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஒப்புக்கொண்டுள்ளன.