வாஷிங்டன்: கத்தார் மீது தாக்குதல் நடத்தும் முடிவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவால் எடுக்கப்பட்டது என்றும், அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல் நடத்தியது. தோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “கத்தார் மீது தாக்குதல் நடத்தும் முடிவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவால் எடுக்கப்பட்டது. அது எனது உத்தரவுப்படி நடத்தப்பட்டதல்ல. கத்தார் மீதான ஒருதலைப்பட்சமான தாக்குதல், அமெரிக்காவின் நலனுக்கோ இஸ்ரேலின் நலனுக்கோ உதவாது” என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதை இது வெளிக்காட்டுவதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தோஹா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய செய்திகளைப் பார்த்தோம். இந்த சம்பவம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, பிராந்தியத்தின் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்தும் நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆபத்தில் சிக்காமல் இருக்க, நிதானத்தையும் ராஜதந்திரத்தையும் நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு அவையின் அவசர கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
இதனிடையே, இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய வானொலிக்கு பேட்டி அளித்த ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர், “இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய நாடுகள். அமெரிக்கா, எங்களுக்கு நம்ப முடியாத ஆதரவை வழங்குகிறது. அதைப் பாராட்டுகிறோம். அதேநேரத்தில், சில சமயங்களில் நாங்கள் முடிவுகளை எடுத்து பிறகு அதனை அமெரிக்காவுக்குத் தெரிவிக்கிறோம். நாங்கள் எப்போதும் அமெரிக்காவின் நலன்களுக்காக செயல்படுவதில்லை. இஸ்ரேல் நடத்தியது கத்தார் மீதான தாக்குதல் அல்ல. அது ஹமாஸ் மீதான தாக்குதல். இது தொடர்பாக இஸ்ரேல் எடுத்த முடிவு மிகவும் சரியானது” என தெரிவித்துள்ளார்.