வாஷிங்டன்: உலகின் ‘நம்பர் 1’ பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வுமான எலான் மஸ்க்கை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான பத்திரிகையாளர் கேள்விக்கு ‘அது குறித்து பார்க்க வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் என இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தனர். அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தரப்புக்கு நேரடியாக உதவி இருந்தார் மஸ்க். அந்த நட்புறவு அண்மையில் முறிவுக்கு வந்தது. அமெரிக்க அரசு அறிமுகம் செய்த ‘பிரமாண்டமான பட்ஜெட்; அழகான பட்ஜெட்’ என ட்ரம்ப் அறிவித்தார். அதை மஸ்க் விமர்சித்தார். அப்போது அவர்கள் இருவருக்கு இடையிலும் மனக் கசப்பு ஏற்பட காரணம் இந்த வரி மசோதா தான் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் “கடையை மூடிவிட்டு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்ப செல்ல நேரிடும். வரலாற்றில் அதிக மானியங்களை பெற்ற மனிதர்தான் மஸ்க்” என குறிப்பிட்டிருந்தார். அரசின் ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்கள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் மஸ்க்கின் நிறுவனங்கள் சரிவை சந்தித்திருக்கும். விண்கலன் ஏவுதல், செயற்கைக்கோள்களை நிறுவுதல் மற்றும் மின்சார கார் உற்பத்தி போன்றவை எப்போதோ முடிவுக்கு வந்து இருக்கும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
மஸ்க் எதிர்வினை: “அனைத்தையும் இப்போதே நிறுத்திக் கொள்ளுங்கள் என நான் சொல்கிறேன். ட்ரம்ப்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாள் அமெரிக்க மக்களின் குரலை பிரதிபலிக்கும் வகையில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிக்கு மாற்றாக ‘அமெரிக்கன் கட்சி’ தொடங்கப்படும்” என மஸ்க் தெரிவித்தார்.
நாடு கடத்தப்படுகிறாரா மஸ்க்? – எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். கனடா (1989) மற்றும் அமெரிக்க (2002) குடியுரிமையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று மஸ்க்கை நாட்டிலிருந்து வெளியேற்றுவது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் வசம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி இருந்தார். “எனக்கு தெரியவில்லை. அது குறித்து பார்க்க வேண்டும்” என ட்ரம்ப் பதில் அளித்தார்.
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் சட்ட விரோத குடியேறிகளை அமெரிக்க நாட்டிலிருந்து நாடு கடத்தி வருகிறது. இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த பதில் கவனம் பெற்றுள்ளது.
மஸ்க் vs ட்ரம்ப் – நடந்தது என்ன? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் செயல்திறன் துறையை (டிஓஜிஇ – DOGE) தொழிலதிபர் எலான் மஸ்க் கவனித்து வந்தார். ஆனால், அவரது துறையின் பரிந்துரைகள் அமெரிக்க அரசின் பட்ஜெட் மசோதாவில் இடம்பெறவில்லை. மாறாக அதில் வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவத்துக்கு கூடுதல் நிதி, மின் வாகனங்களுக்கான மானியம் ரத்து போன்றவை இடம் பெற்றிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த எலான் மஸ்க் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார்.
பரஸ்பர தாக்கு: அதன்பின் அதிபர் ட்ரம்ப் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கத் தொடங்கினார். “மிகப் பெரிய அருமையான பட்ஜெட்” என கிண்டலடித்த எலான் மஸ்க், பின்னர் இது அருவறுப்பான பட்ஜெட் எனவும் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து பொறுப்பை துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஊடகத்தில் ஒருவர் தெரிவித்த கருத்துக்கும் ‘ஆமாம்’ என எலான் மஸ்க் பதிவிட்டார்.
“எலான் மஸ்க் நிறுவனங்களுடனான அமெரிக்க அரசின் ஒப்பந்தத்தையும், மானியத்தையும் நிறுத்தினால், அமெரிக்க பட்ஜெட்டில் பல லட்சம் கோடி மிச்சமாகும்” என அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து “அதிபர் ட்ரம்ப் நன்றி கெட்டவர். நான் ஆதரவு அளிக்கவில்லை என்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் ஜெயித்திருக்க முடியாது” என எலான் மஸ்க் கூறினார்.
மேலும் அதிபர் ட்ரம்ப்-ஐ, சட்டவிரோத பாலியல் வழக்கில் சிக்கி தற்கொலை செய்த ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அதிபர் ட்ரம்ப்புக்கு தொடர்பு உள்ளது எனக் கூறி அவருடன், ட்ரம்ப் இருக்கும் பழைய வீடியோ ஒன்றையும் எலான் மஸ்க் பகிர்ந்தார். இதனால் எலான் மஸ்க் மீது வெறுப்படைந்த அதிபர் ட்ரம்ப், “இனிமேல் எலான் மஸ்க்குடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை” எனக் கூறினார்.
இதையடுத்து, திடீர் திருப்பமாக எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “அதிபர் ட்ரம்ப் பற்றி கொஞ்சம் அதிகமாக விமர்சித்துவிட்டேன், வருந்துகிறேன்” என தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொள்வது போல், “மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று. அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.