தொழிலதிபர் எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு ட்வீட்டால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் பங்கு தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகின்றன. இது அந்த நிறுவனத்தையே ஆட்டம் காணச் செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் மீது அமெரிக்க வலதுசாரி ஆதரவாளர்கள் ஒரு குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். அதாவது தனது திரைப்படங்கள், வெப் தொடர்கள் மூலம் LGBTQ கலாச்சாரத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பார்வையாளர்களிடம் வலிந்து திணிக்கிறது என்பது அவர்களுடைய புகார்.
இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தீவிர வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க் கொல்லப்பட்டார். இதனையடுத்து சார்லி கிர்க் குறித்து அனிமேஷன் பட இயக்குநரான லண்டனைச் சேர்ந்த ஹாமிஷ் ஸ்டீல் என்பவர் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்தார். சார்லி கிர்க் ஒரு ‘நாஜி’ என்று அவர் கூறியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஹாமிஷ் ஸ்டீல் இயக்கிய ‘Dead End: Paranormal Park’ என்ற அனிமேஷன் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. குழந்தைகள் பார்க்கும் இந்த அனிமேஷன் தொடரில் LGBTQ கலாச்சாரத்தை வலிந்து திணிக்கும் காட்சிகளை ஹாமிஷ் ஸ்டீல் இடம்பெறச் செய்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.
Cancel Netflix for the health of your kids https://t.co/uPcGiURaCp
— Elon Musk (@elonmusk) October 1, 2025
சார்லி கிர்க் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஒருவரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பணியில் அமர்த்தியுள்ளது மட்டுமின்றி அவர் இயக்கிய தொடரில் LGBTQ கலாச்சாரத்துக்கு ஆதரவான கருத்துகள் இடம்பெற்றிருப்பதால் தனது நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை ரத்து செய்வதாக பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார். இந்த பதிவை ரீட்வீட் செய்திருந்த மஸ்க், தானும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை ரத்து செய்வதை உறுதி செய்தார்.
இதனையடுத்து #CancelNetflix என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகத் தொடங்கிவிட்டது. ஆயிரக்கணக்கானோர் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை ரத்து செய்த ஸ்க்ரீன்ஷாட்களை பகிர்ந்து வருகின்றனர். எலான் மஸ்க்கும் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பதிவிட்டு வந்தார். மேலும் பல தொடர்கள், திரைப்படங்களில் இடம்பெற்ற LGBTQ தொடர்பான காட்சிகளையும் பதிவிட்டு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதன் எதிரொலியாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு நாட்களாக மளமளவென சரிந்துள்ளன. இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.
மஸ்க்கின் பதிவுகளைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதன் சந்தை மூலதனத்தில் 1.05 சதவீதத்தை இழந்துள்ளது. இது $5.33 பில்லியன் டாலர்கள் ஆகும். இதனால் அந்த நிறுவனத்தின் மதிப்பு 507.25 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கடும் இழப்பை சந்திக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நெட்ஃப்ளிக்ஸ் பங்குகள் அதன் முதலீட்டாளர்களுக்கு 128%-க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன. கடந்த ஆண்டில், நெட்ஃப்ளிக்ஸ் பங்கு 61% க்கும் மேல் அதிகரித்தது. 2025-ஆம் ஆண்டில், அதன் பங்குகள் 30% க்கு மேல் அதிகரித்தன. இருப்பினும் கடந்த மாதம் 4.60% சரிவைக் கண்டன.
எலான் மஸ்க் vs நெட்ஃப்ளிக்ஸ் இடையிலான இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் LGBTQ, குழந்தைகளின் பாதுகாப்பு என பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன. இதுகுறித்து லட்சக்கணக்கான பயனர்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். தொடர்ந்து பலரும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாக்களை ரத்து செய்து வந்தாலும், இது தற்காலிகமானதுதான் என்றும், இந்த சர்ச்சைகள் ஓய்ந்ததும் விரைவில் நெட்ஃப்ளிக்ஸின் பங்குகள் மீண்டும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.