
புதுடெல்லி: ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
9/11 தாக்குதல்: கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல் கயிதா அமைப்பின் 19 பயங்கரவாதிகள், 4 வர்த்தக விமானங்களைக் கடத்தினர். அதில், இரண்டு விமானங்கள் மூலம் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் (ட்வின் டவர்) என வர்ணிக்கப்பட்ட இரண்டு மிக உயரமான கட்டிடங்களைத் தாக்கி அழித்தனர். மூன்றாவது விமானத்தின் மூலம் அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகமான பெண்டகன் மீது தாக்குதல் நடத்தினர். மற்றொரு விமானம் பென்சில்வேனியாவில் விளை நிலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

