தியான்ஜின்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ ) பிரகடனத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று, மாநாட்டின் பிரகடனங்கள் வெளியிடப்பட்டன. அதில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த பிரகடனத்தில், “பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உறுப்பு நாடுகள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதலை நடத்தியவர்கள், ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்லை தாண்டிய ஊடுருவல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் தியான்ஜின் பிரகடனம் அழைப்பு விடுத்துள்ளது. இதபோல், பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
10 உறுப்பினர்களைக் கொண்ட எஸ்சிஓ அமைப்பில் பாகிஸ்தானும் உள்ளது. முன்னதாக, எஸ்சிஓ மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினையில் எந்த வகையான இரட்டை நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பதாக பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் குற்றம் சாட்டினார்.