பார்சிலோனா: பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று பல்வேறு படகுகள் புறப்பட்டன. இந்த பயணத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் இணைந்துள்ளார்.
இஸ்ரேல் கடற்படையின் தடையை தகர்த்து காசா மக்களுக்கு உதவுவது இந்த பயணத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. இந்த பயணம் பார்சிலோனாவில் தொடங்கிய போது ஆயிர கணக்கான மக்கள் திரண்டு, காசா புறப்பட்ட படகுகளை வழியனுப்பி வைத்தனர். அப்போது பாலஸ்தீன கொடிகளை கையில் ஏந்தியிருந்த அவர்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ‘இது யுத்தம் அல்ல; இது இனப்படுகொலை’ முழக்கமிட்டனர்.
“சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்த தவறியது, வன்முறை, வணிக ரீதியாக செயல்படும் சர்வதேச அமைப்புக்கு சவாலாக இந்த பயணத்தின் பணி உள்ளது” என கிரெட்டா தன்பெர்க் பயணத்துக்கு முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த படகு பயணத்தில் கிரீஸ், இத்தாலி, துனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் நிவாரண உதவிப் பொருட்களுடன் மேலும் சில படகுகள் இணைய உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடமிருந்து இந்த நிவாரண பொருட்கள் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் காசாவுக்கு நிவாரண பொருட்களுடன் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட சில செயல்பாட்டாளர்கள் படகு பயணம் மேற்கொண்டனர். அப்போது அந்த படகுகளை இடைமறித்த இஸ்ரேல் படை, அவர்களை நாடு கடத்தியது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு உலக நாடுகள் சில கண்டனம் தெரிவித்தன.
ஹமாஸ் படையினரின் ஆயுத கடத்தலை தடுக்கும் வகையில் கடல் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த தடுப்பு நடவடிக்கையை முன்னெடுத்தாக இஸ்ரேல் கடந்த ஜூன் மாதம் வாதிட்டது. ஹமாஸுக்கு ஆதரவான பல்வேறு முயற்சிகளை தங்கள் படை தகர்த்து வருவதாக இஸ்ரேல் அப்போது கூறியிருந்தது.
கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது. அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 63,000 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழப்பதாக தகவல். காசாவில் உணவு பஞ்சம் நிலவுவதை ஐ.நா அண்மையில் அறிவித்திருந்தது.