கீவ்: உக்ரைன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலில் கீவ் நகரில் மட்டும் 23 பேர் படுகாடமடைந்தனர்.
ஒருபக்கம் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது ரஷ்யா.
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று இரவு முழுவதும் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 23 பேர் காயமடைந்தனர். இந்த மிகப்பெரிய வான்வெளி தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதில் பெரும்பாலானவை ஷாஹெட் ட்ரோன்கள் என்றும், இதில் சுமார் 11 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தையும், தாக்குதலும்! இதுகுறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரஷ்யா நடத்திய இந்த மிகப் பெரிய வான்வழித் தாக்குதலில் மொத்தத்தில், 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் குறைந்தது 330 ரஷ்ய-ஈரானிய ஷாஹெட்கள் இருந்தன.
ட்ரம்ப் மற்றும் புதினுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளும், உக்ரைன் மீதான தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடக்கின்றன. போரையும், பயங்கரவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. இன்று காலை 9 மணியளவில்தான் கீவில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஓய்ந்தன. இது ஒரு கொடூரமான, தூக்கமில்லாத இரவு. இன்றைய ரஷ்ய தாக்குதல் கீவை மட்டுமல்ல, டினிப்ரோ, சுமி, கார்கிவ், செர்னிஹிவ் உள்ளிட்ட பகுதிகளையும் பாதித்தது. தற்போது வரை, 23 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன’ என்று தெரிவித்தார்
முன்னதாக, கடந்த வாரம் ரஷ்யா உக்ரைன் மீது 537 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளை வீசித்தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா தொடுத்துள்ளதால், உக்ரைன் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.