நியூயார்க்: ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி அளிப்பதாக குற்றம்சாட்டினார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் ட்ரம்ப் பொறுப்பேற்றார். அது முதலே தனது அதிரடி நடவடிக்கை மூலம் உள்நாடு மற்றும் உலக நாடுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்தச் சூழலில் நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் ட்ரம்ப் உரையாற்றினார். இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் ட்ரம்ப் பேசும்போது, “இது அமெரிக்காவின் பொற்காலம். உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்கிறது.
வலுவான பொருளாதாரம், வலுவான ராணுவம், வலுவான எல்லைகள், வலுவான நட்புறவை அமெரிக்கா பெற்றுள்ளது. வேறு எந்த நாடும் அமெரிக்காவை நெருங்க முடியாது. அதிபராக எனது முதல் ஆட்சியில் அற்புதமாக செயல்பட்டேன். இப்போது இரண்டாவது ஆட்சியிலும் அதை தொடர்வேன். அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைபவர்கள் தடுத்துள்ளேன். குடியேற்ற விவகாரத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
கம்போடியா – தாய்லாந்து, காங்கோ – ருவாண்டா, இந்தியா – பாகிஸ்தான், இஸ்ரேல் – ஈராக், எகிப்து – எத்தியோப்பியா, அர்மேனியா – அஜர்பைஜான் உட்பட 7 போர்களை நிறுத்தி உள்ளேன். இதை ஐ.நா செய்திருக்க வேண்டும். ஆனால், அதை நான் செய்தேன். அதற்காக ஐ.நா எனக்கு பாராட்டு கூட தெரிவிக்கவில்லை.
மனித குலத்துக்கு அணு ஆயுதம் பேராபத்தாக திகழ்கிறது. இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்தத்தை உறுதி செய்ய வேண்டும். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது ஹமாஸுக்கு நன்மை சேர்க்கும். இஸ்ரேல் – காசா இடையிலான அமைதி உடன்படிக்கையை அவர்கள்தான் நிராகரித்து வருகின்றனர். பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடு.
உக்ரைன் – ரஷ்யா போர்: உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறேன். இந்தப் போரில் ரஷ்யாவுக்கு இந்தியாவும், சீனாவும் நிதி உதவி அளிக்கிறார்கள். ரஷ்யாவில் இருந்து அவர்கள் கச்சா எண்ணெய் வாங்குவதுதான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பாவும் தலையிட வேண்டும். உலகின் உயிரி ஆயுதங்கள் உருவாக்குவதை நாம் தடுக்க வேண்டும். அதற்கான முயற்சியை சர்வதேச அளவில் நான் முன்னெடுப்பேன்.
உலக நாடுகளுக்கு எதிரான வரி விதிப்பு அமெரிக்கா கடையில் எடுத்துள்ள தடுப்பு முறை நடவடிக்கை. அமெரிக்காவுக்கு கடும் வரி விதிப்பவர்களுக்கு வரி விதித்துள்ளோம்” என்றார் ட்ரம்ப்.