நியூயார்க்: “அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்று ரஷ்ய அதிபர் புதினிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி,வினவியுள்ளார்.” என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதாலேயே இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கிறோம். மற்றபடி எங்களுக்கும் இந்தியாவுக்குமான நல்லுறவு நீடிக்கிறது. மோடி எனது நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்று ரஷ்ய அதிபர் புதினிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி,வினவியதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த மார்க் ரூட், “இந்தியா மீதான ட்ரம்ப்பின் வரி ரஷ்யாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து புதினுக்கு போன் அழைப்புகள் பறக்கிறது. பிரதமர் மோடி, உக்ரைன் போரில் ரஷ்யாவின் திட்டமென்னவென்று கேட்டுள்ளார்.” என்றார்.
நேட்டோ பொதுச் செய்யலாளரின் இந்தக் கருத்து குறித்து மத்திய அரசுத் தரப்பில் எந்த எதிர்வினையும் இதுவரை இல்லை. அண்மையில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நியூயார்க்கில் அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்தச் சூழலில் புதினிடம் மோடி பேசியதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்க குற்றச்சாட்டும்; இந்திய நிலைப்பாடும்: இந்தியாவுக்கு 25% பதில் வரியுடம் 25% கூடுதலாக இறக்குமதி வரி விதித்தது அமெரிக்கா. உக்ரைனுடனான போரை ரஷ்யா நிறுத்த வேண்டுமென்பதற்காக பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தும் கூட ரஷ்யா போரை நீட்டித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது ரீதியாக அளிக்கும் பணம் தான். இந்தியா இதன் மூலம் மறைமுகமாக உக்ரைன் போரை ஊக்குவிக்கிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. மேலும், இந்தியா, சீனா மீது ஐரோப்பிய யூனியன் நாடுகளும் கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்று கூறியது.
இந்நிலையில், இந்திய அரசோ அமெரிக்க வரி நியாயமற்றது என்று விமர்சித்து வருகிறது. இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகைக்கு, தடையற்றி எரிசக்தி விநியோகிக்கவே ரஷ்யாவிடமும் எண்ணெய் வாங்குகிறோம். உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியில் அவ்வப்போது ஏற்படும் தடங்கல்களை சமாளிக்க் ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகம் அவசியமாகிறது. ரஷ்யாவிடம் நாங்கள் மட்டுமல்ல, ஐரோப்பியன் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வாங்குகின்றன, என்று கூறிவருகிறது.
மருந்துகளுக்கு 100% வரி – இதற்கிடையில், “வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும்.
இதேபோல சமையலறை கேபினட்கள், குளியலறை பொருட்களுக்கு 50 சதவீதமும், ஃபர்னிச்சர்களுக்கு 30 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம். நமது தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்கிறோம்” என தனது ட்ரூத் சோஷியல் பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளது சர்வதேச கவனம் பெற்றுள்ளது.