கீவ்: உக்ரைன் தேசத்தின் அமைதிக்காக இன்று உக்ரைனுக்கும், மக்களுக்கும் ஆதரவு அளிப்பவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகி உள்ள ட்ரம்ப், தனது தேர்தல் பிரச்சாரம் மற்றும் பல்வேறு உரைகளில் தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து பேசி வருகிறார்.
இந்த சூழலில் ஐரோப்பாவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனியின் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், பின்லாந்து அதிபர் ஸ்டப் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
“போரின் முடிவு நியாயமானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உக்ரைனின் அமைதிக்காக உக்ரைனுடனும், மக்களுடனும் நிற்கும் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். இது நமது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு நலனை உறுதி செய்கிறது.
உக்ரைனின் அமைதிக்காக பேசி அறிக்கை வெளியிட்டுள்ள அதிபர் மக்ரோன், பிரதமர் மெலோனி, அதிபர் மெர்ஸ், பிரதமர் ஸ்டார்மர், பிரதமர் டஸ்க், அதிபர் ஸ்டப் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரை உக்ரைன் முழுமையாக ஆதரிக்கிறது” என ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.