தெஹ்ரான்: அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், கடந்த பல வாரங்களாக ஈரானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அம்சங்களைக் கருத்தில் கொள்ளுமாறும், சூழ்நிலையை கவனமாக பரிசீலிக்குமாறும் இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஈரானில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிப்பதோடு, இந்திய அதிகாரிகள் வழங்கிய சமீபத்திய ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், இங்கிருந்து வெளியேற விரும்பினால் தற்போது கிடைக்கும் வணிக விமான சேவை மற்றும் கப்பல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயல்வதாகவும், இது தங்கள் நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறி அந்நாட்டுக்கு எதிராக இஸ்ரேல் கடந்த மாதம் வான் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கான மூன்று மையங்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியது.
பதில் நடவடிக்கையாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ விமான தளத்தின் மீது ஈரான் வான் தாக்குதல்களை நடத்தியது. இதனால், அங்கு பதற்றம் அதிகரித்தது. இதன் காரணமாக, ஈரானில் இருந்த இந்தியர்களில் பலர் மத்திய அரசு அனுப்பிய விமானங்கள் மூலம் பத்திரமாக நாடு திரும்பினர். எனினும், இன்னமும் பலர் அங்கேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் 12 நாட்கள் நீடித்த நிலையில், அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை அடுத்து அங்கு அமைதி திரும்பியது. இந்த பின்னணியில், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.