இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் அடுத்தடுத்த ஏற்படும் மக்கள் போராட்டம் இந்தியாவுக்கு புவி அரசியலில் ஒரு புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
3 ஆண்டுகள்… 3 நாடுகள்… – கடந்த 2022-ம் ஆண்டு, இலங்கையில் மிகப் பெரிய மக்கள் புரட்சி வெடித்தது. 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்க மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகியதோடு, நாட்டை விட்டே தப்பியோட நேர்ந்தது. அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் ‘பெட்ரோல், கேஸ் வாங்க முடியாமல் நாங்கள் இருக்க, அதிபர் மாளிகையின் செல்வச் செழிப்பைப் பாருங்கள்’ என்று வீடியோ எடுத்துப் பரப்பி விரக்தியை வெளிப்படுத்தினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் தஞ்சமடைந்தார்.
2024-ம் ஆண்டு வங்கதேசத்தில் மிகப் பெரிய மாணவர் போராட்டம் வெடித்தது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார். இந்நிலையில், அவரது அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் ஹசீனா அரசு கவிழ்ந்ததையடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இப்போது 2025-ம் ஆண்டின் கடைசிப் பகுதியை எட்டியுள்ள நிலையில், நேபாளத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்து, நாட்டின் அதிபராக இருந்த ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக, தனது அண்டை நாடுகளில் அடுத்தடுத்த ஏற்படும் கொந்தளிப்புகள், உலக அரங்கில் வல்லரசாகும் இலக்குடன் முன்னேறிவரும் இந்தியாவுக்கு நிச்சயமாக ஒரு சவால் என்றே சர்வதேச அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
பின்னணியில் சர்வதேச சதி!? – இலங்கை, வங்கதேசத்தில் நடந்த போராட்ட பாணியில்தான் நேபாளத்திலும் கிளர்ச்சி வெடித்துள்ளது. மாணவர்கள் போராட்டமாக தொடங்கி, பின்னர் அவர்களின் பிரதான கோரிக்கைகள் கடந்து நாட்டின் அதிபர் / தலைவர்கள் வெளியேறும் வரை போராட்டம் நீடித்தது. வங்கதேசத்திலும் அதுவே நடந்தது. அந்நாட்டு அதிபராக இருந்த ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதால், அங்குள்ள இப்போதைய இடைக்கால அரசுக்கும் இந்தியாவுக்கும் இடையே அத்தனை சுமுகமான உறவு இல்லை.
நேபாளத்தில் முதலில் சமூக வலைதள தடைக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டது. அந்தத் தடை விலக்கப்பட்ட பின்னரும் கூட, “பிரதமர் ஒலி ஒரு திருடர்; அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்” என்ற கலகக்குரல் வலுத்தது. பிரதமர் பதவியைத் துறந்த கே.பி.சர்மா ஒலி, துபாயில் தஞ்சமடையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை, வங்கதேசத்தைப் போலவே நேபாளத்தில் ஏற்பட்ட கலவரமும் இந்தியாவால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. கலவர பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டி ஆலோசனையும் நடத்தினார். ஏனெனில், நேபாளம் பூகோள வரைபடத்தில் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. சிக்கிம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பிஹார் என ஐந்து மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நேபாள நிலப் பகுதிகள் அமைந்திருக்கின்றன. எண்ணெய் மற்றும் உணவுக்காக இந்தியாவையே பெரும்பாலும் நம்பியிருக்கிறது நேபாளம்.
கலாச்சார தொடர்புகள், இந்தியாவில் நேபாளிகள் அதிகம் பணிபுரிதல் என்ற எத்தனை தொடர்பு இருந்தாலும் கூட நேபாளத்தில் இருந்துவரும் அரசுகள் எப்போதுமே சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டுபவையாக இருந்துள்ளன. அது கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – யுஎம்எல்-ஆக இருக்கட்டும், இல்லை ஷேர் பகதூர் தூபாவின் நேபாளி காங்கிரஸாக, புஷ்ப கமல் தாஹல் என்ற பிரச்சண்டாவின் கம்யூனிஸ்ட் பார்டி ஆஃப் நேபாளாக இருக்கட்டும். எல்லாமே சீனா சார்புடையதாகவே இருந்துள்ளன.
மூன்று தலைவர்கள் மீதுமே ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நேபாள அரசியலமைப்பு, பொருளாதார தேக்க நிலை, வேலையில்லா திண்டாட்டங்கள் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில் சமூக வலைதளத் தடை நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோல் அமைந்தது. இளம் போராட்டக்காரர்கள், ஊழல்வாதிகள் மீது நடவடிக்கையோடு ஒட்டுமொத்த அரசமைப்பையும் மாற்றி எழுத வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
மூன்று நாடுகளில் நடந்த போராட்ட வடிவத்தில் ஒர் ஒத்திசைவு இருப்பதை சுட்டிக் காட்டும் நிபுணர்கள், இதன் பின்னணியில் அமெரிக்கா, சீனாவின் கை இருக்கும் என்று சந்தேகத்தை கிளப்புகின்றனர்.
அமெரிக்கா, சீனாவின் கரிசனை: இதில் அமெரிக்கா, சீனாவின் கரிசனம் கவனிக்கப்பட வேண்டியது. மன்னராட்சியில் இருந்த நேபாளத்தில் அரசமைப்புச் சட்டம் அமலான பின்னர் அங்கு அமெரிக்காவும், சீனாவும் தங்கள் தூதரகச் செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொண்டன. அப்போதிருந்தே அமெரிக்காவும், சீனாவும் போட்டிபோட்டு நேபாளத்துக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை அள்ளித் தெளித்து வருகின்றன. ஆனாலும், 17 ஆண்டுகளில் அங்கு 14 முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2020, ஜூன் 18-ம் தேதி நேபாளம் அதன் அரசியல் அமைப்பை திருத்துவதன் மூலம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் அரசியல் வரைபடத்தைப் புதுப்பிக்கும் பணியை நிறைவு செய்தது. இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியது. எல்லை விவகாரம் இந்தியா – நேபாளம் இடையே புகைந்து கொண்டே இருக்கும் சூழலில், இன்னும் ஒரு வாரத்தில் கே.பி.சர்மா ஒலி இந்தியாவுக்கு வரவிருந்தார். இந்தச் சூழலில் தான் கலவரம் மூண்டு நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது.
இலங்கை, பாகிஸ்தானை போல சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் நேபாளமும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெற்காசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவுக்கு செக் வைக்க நேபாளம் மீதான அக்கறையை அமெரிக்காவும் விஸ்தரித்தது. 500 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்பில் நேபாளத்தில் எரிசக்தி, சாலை கட்டுமான திட்டங்களை வாரி வழங்கியது ட்ரம்ப் அரசு. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
அமெரிக்க உதவியைப் பெற்றுக்கொண்டாலும் கூட அதீத விசுவாசத்தை சீனாவுக்கே காட்டினார் ஒலி. அண்மையில் சீனாவில் நடந்த ராணுவத்தின் இரண்டாம் உலகப் போர் வெற்றிப் பேரணிக்கு சென்றுவந்தார் ஒலி. இது அமெரிக்காவை கடுப்பேற்றியதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் நேபாளத்தில் வெடித்த கலவரம் 100% அமெரிக்காவில் திட்டமிட்டு புகுத்தப்பட்டதே என்று சில புவி அரசியல் நோக்கர்கள் அடித்துச் சொல்கின்றனர்.
மேலும், நேபாளத்தில் சீன ஆதரவு அரசு அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதால், அமெரிக்க ஆதரவு மன்னராட்சி கூட அமலுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக, வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது ஹசீனா அமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வங்கக் கடலில் செயின்ட் மார்ட்டின் தீவுகளில் அமெரிக்கா கடற்படை தளம் அமைக்க விரும்பியபோது, தான் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததால், தனக்கெதிராக போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிட்டது என்று குற்றச்சாட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்படும் குழப்பங்கள் சீனா தனது அதிகாரத்தை விஸ்தரிப்பதில் இடையூறை ஏற்படுத்துவதோடு, பொருளாதாரத்தில் உயர்ந்ததோடு, புதிய அதிகார வீச்சை ஏற்படுத்த முயலும் இந்தியாவுக்கும் மிகப் பெரிய நெருக்கடியைத் தரும். இந்தியாவின் உயர்ந்த லட்சியங்களை எட்டுவதற்கு அண்டை நாடுகளின் அமைதியும் முக்கியம் என்பது மறுக்க முடியாத காரணி.
இந்தச் சூழலில் நேபாள மாணவர்களுக்கு இந்தியாவில் அதிகப்படியான ஃபெலோஷிப் வழங்குவது, நேபாள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பது போன்ற சில உத்திகளை இந்தியா செயல்படுத்தினால், நேபாளம் முழுமையாக சீன ஆதிக்கத்துக்குள்ளோ அல்லது அமெரிக்க சதிக்குள்ளோ சிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஏற்கெனவே வங்கதேசத்துடனான உறவு சிக்கலில் உள்ளது, பாகிஸ்தானுடனான உறவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை, மியான்மார் உள்நாட்டுக் கலவரத்தில் திக்குமுக்காடுகிறது. இதில், நேபாளம் பற்றி எரிவது இந்தியாவுக்கு சவால்தான்!