பாக்தாத்: இராக்கில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கிழக்கு இராக்கின் வசிட் மாகாணம் குட் நகரில் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு புதிய வணிக வளாகம் திறக்கப்பட்டது. 5 தளங்களைக் கொண்ட அதில் உணவகம், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை இரவு அந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் படையினரும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பிரதமர் முகமது ஷியா அல்-சுதானி உத்தரவின் பேரில் உள்துறை அமைச்சர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். இதுகுறித்து இராக் உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர். இதில் 14 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் கருகி உள்ளன. 45-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்” என கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. கட்டிட உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாகாண ஆளுநர் முகமது அல்-மயே வெளியிட்ட அறிக்கையில், “வணிக வளாக தீ விபத்தை அடுத்து 3 நாட்களுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமானவர்களுக்கு கருணை காட்ட மாட்டோம் என உறுதி அளிக்கிறோம். முதல்கட்ட விசாரணை அறிக்கை 48 மணி நேரத்தில் வெளியிடப்படும்” என கூறப்பட்டுள்ளது.