காத்மாண்டு: நேபாளத்தின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை ராணுவம் மேற்கொள்ளத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.
ஃபஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் இளைஞர்கள் கடந்த 8-ம் தேதி வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.
இளைஞர்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. நேபாள நாடாளுமன்றம், நேபாள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், முன்னாள் பிரதமரின் இல்லம், அமைச்சர்களின் இல்லம் என பல கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து, பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை நேற்று ராஜினமா செய்தார். இதையடுத்து, உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை ராணுவம் ஏற்றது.
இதன் காரணமாக, நேபாளத்தில் அமைதி திரும்பி வருகிறது. காத்மாண்டுவின் தெருக்களில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒலிபெருக்கி மூலம் அவர்கள் மக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. விமான நிலையம் காலவரையின்றி மூடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சொந்த நாடு திரும்ப முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். தற்போது அமைதி திரும்பி இருப்பதால், சர்வதேச விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திரிபுவன் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “செப்.10 அன்று திரிபுவன் சர்வதேச விமான நிலைய பாதுகாப்புக் குழு எடுத்த முடிவின் படி விமானங்கள் இப்போது மீண்டும் இயங்கத் தொடங்கும். இந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்குச் செல்வதற்கு முன் பயணிகள், புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணை குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.