வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்த இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினார். அவரது விண்கலம் நேற்று பிற்பகல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பசிபிக் கடலில் பத்திரமாக இறங்கியது.
தனியார் நிறுவனமான அக்ஸியம் ஸ்பேஸ், அமெரிக்கவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு டிராகன் விண்கலத்தை அனுப்பின. இதில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடியுடன் சுக்லா உரையாடினார். மேலும், திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோவை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடனும் சுக்லா கலந்துரையாடினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஷுபன்ஷு சுக்லா 18 நாட்கள் தங்கியிருந்து, 60 வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர் உட்பட 4 விண்வெளி வீரர்களும் நேற்று முன்தினம் மாலை 4.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர்.
சுமார் 23 மணி நேர பயணத்துக்கு பிறகு டிராகன் விண்கலம், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டியாகோ நகரின் பசிபிக் கடலில் இந்திய நேரப்படி நேற்று மாலை 3 மணியளவில் பத்திரமாக இறங்கியது. டிராகன் விண்கலத்தின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் நாசாவின் மீட்புக் குழுவினர் சிறப்பு கப்பல், படகுகளில் சென்று விண்கலத்தை மீட்டனர்.
படகுகள் மூலம் விண்கலம் சிறப்பு கப்பலுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. கிரேன் மூலம் விண்கலம் கப்பலில் ஏற்றப்பட்டது. இதன்பிறகு விண்கலத்தின் கதவு திறக்கப்பட்டது. குழுவின் தலைவர் பெக்கி விட்சன் முதல் நபராக விண்கலத்தில் இருந்து வெளியேறினார். அடுத்ததாக விண்கலத்தின் விமானி ஷுபன்ஷு சுக்லா வெளியே வந்தார். ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, திபோர் கபு ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, ‘‘விண்கலத்தில் இருந்த 4 வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விண்வெளியில் தங்கியிருந்ததால் அவர்களின் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. பூமியின் சூழலுக்கு மாற அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் வரை தேவைப்படும். இதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மெரிட் தீவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் சிறப்பு மருத்துவ பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை, பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஆக. 17-ல் இந்தியா வரும் சுக்லா இஸ்ரோ வட்டாரங்கள் கூறியதாவது: 1984-ல் ரஷ்ய விண்கலத்தில் இந்திய வீரர் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றார். 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வெற்றிகரமாக திரும்பியுள்ளார். ககன்யான் திட்டத்தின்படி 2027-ல் இஸ்ரோ சார்பில் சிறப்பு விண்கலத்தில் விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். இந்த திட்டத்துக்கு சுக்லாவின் விண்வெளி பயண அனுபவம் உதவிக்கரமாக இருக்கும்.
தற்போது ஷுபன்ஷு சுக்லா அமெரிக்காவின் சிறப்பு மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு சிகிச்சைகள், பயிற்சிகள் வழங்கப்படும். விண்வெளியில் சுக்லா தங்கியிருந்ததால் அவரது எலும்புகள் பலவீனமாக இருக்கும். அவரது இதயம், மூளை, நரம்புகளின் செயல்பாடுகளிலும் மாற்றம் இருக்கும். செவித் திறன், பார்வைத் திறன் சிறிது பாதிக்கப்பட்டு இருக்கும். தோல் மிகவும் மென்மையாக மாறியிருக்கும். அவர் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும். அமெரிக்காவில் இருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி சுக்லா இந்தியாவுக்கு திரும்புவார். இவ்வாறு இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் மோடி நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா, வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளி பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பி உள்ளார். அவரை வாழ்த்தி வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரது அர்ப்பணிப்பு உணர்வு, துணிச்சல், மன வலிமை கோடிக்கணக்கான மக்களின் கனவுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. இது நமது சொந்த மனித விண்வெளி பயணமான ககன்யானை நோக்கிய மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது.இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷுபன்ஷு சுக்லாவின் தந்தை ஷம்புவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.