வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கி வருகிறது. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் முன்வரிசையில் நிற்பவர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ.
இந்தியா, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக தொடர்ச்சியாக காட்டமான விமர்சனங்களை பீட்டர் நவரோ வைத்து வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பின் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் எக்ஸ் தளத்தில் ‘ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது, ரஷ்ய போர் இயந்திரங்களுக்கு தீனி போடுகிறது’ என நவரோ பதிவிட்டிருந்தார். அந்த பதிவை தான் சரிபார்த்துள்ளது எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ தள உண்மை சரிபார்ப்பு குழு.
“எரிசக்தி பாதுகாப்பு சார்ந்த சட்டப்பூர்வமான முறையில் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற செயல் அல்ல. ரஷ்ய விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா, யுரேனியம் உள்ளிட்ட ரஷ்ய பொருட்களை இறக்குமதி செய்வதைத் தொடர்கிறது. இது தெளிவான இரட்டை நிலைபாடு என்பதை சுட்டுகிறது” என்று எக்ஸ் கம்யூனிட்டி நோட்டில் தெரிவித்துள்ளது. சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் தவறான தகவலுக்கு விளக்கம் கொடுப்பது தான் எக்ஸ் கம்யூனிட்டியின் நோக்கமாக உள்ளது.
அதை பார்த்து விரக்தி அடைந்த நவரோ, “மக்களின் பதிவுகளில் பரப்புரை சார்ந்த பிரச்சாரம் மேற்கொள்ள எலான் மஸ்க் அனுமதிக்கிறார். இது அறிவற்ற செயல். லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்பு வாங்கும் அந்த வழக்கம் இல்லை. உக்ரேனியர்களைக் கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்கர்களின் பணியை பறிப்பதை நிறுத்துங்கள்” என்று நவரோ ரியாக்ட் செய்துள்ளார்.