வாஷிங்டன்: ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். இதனால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வரி மோதல் சூடு பிடித்துள்ளது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு துரதிருஷ்டவசமானது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்தற்காக அமெரிக்காவில் எதிர்க்கட்சியாக செயல்படும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கிரெகோரி மீக்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த வரிவிதிப்பு இந்தியாவும், அமெரிக்காவும் பல ஆண்டுகளாக கட்டி எழுப்பி வந்த உறவை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்த கூடுதலான வரி விதிப்புகள் இந்தியா, அமெரிக்கா இடையிலான நீண்ட கால உறவை மிகவும் பாதிக்கும்.
எந்தவொரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தை முறையிலோ அல்லது மரியாதைக்குரிய முறையிலோ தீர்க்கப்பட வேண்டும். ஆனால், கடந்த வாரம் 25 சதவீத வரியை விதித்த அதிபர் ட்ரம்ப், இந்த வாரத்தில் கூடுதலாக 25 சதவீத வரியை இந்தியா மீது விதித்துள்ளார். இந்த வரிவிதிப்புகள் மிகவும் அதிகமாகும். இது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.