வாஷிங்டன்: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும், பிரதமர் மோடியுடன் பேச ஆவலாக உள்ளேன் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், ட்ரம்புடன் பேச நானும் ஆவலாக உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனல்டு ட்ரம்ப், உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதனால், பதிலுக்கு பதில் வரி விதிக்கப்படும் எனக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். இதன்படி, இந்திய பொருட்களுக்கு 25% வரி விதித்தார். இதனிடையே, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், சில விஷயங்களில் உடன்பாடு எட்டப்படாததால் இழுபறி நீடித்தது.
இதேபோல, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இதன்படி, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுவதாக குற்றம்சாட்டினார். கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இதை ஏற்க இந்தியா மறுத்ததால், கூடுதலாக 25% வரி அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது என்றும், ஏற்கத்தக்கது அல்ல என்றும் இந்தியா தெரிவித்தது.
மேலும், பாகிஸ்தான், இந்தியா இடையிலான போரை தான்தான் நிறுத்தினேன் என தொடர்ந்து கூறி வந்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனால், அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவில் உரசல் ஏற்பட்டது. இதற்கு நடுவே, அதிபர் ட்ரம்ப் 4 முறை பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சி செய்தார். ஆனால், அவரது அழைப்பை பிரதமர் மோடி ஏற்கவில்லை என தகவல் வெளியானது.
அமெரிக்காவுடன் உரசல் ஏற்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, 7 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை ட்ரம்ப் விமர்சித்தார். மேலும் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்தியா சீனாவுடன் நெருங்கி வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, பிரதமர் மோடி எப்போதும் எனது நண்பர்தான் என்றும், ஆனால் அவரின் சில நடவடிக்கைகளை நான் விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு கூறிஇருந்தார். இதுபோல இந்தியா, அமெரிக்கா இடையே நல்ல நட்புறவு உள்ளது. அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், அதிபர் ட்ரம்பின் உணர்வுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டை பாராட்டுகிறேன் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தடைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. வரும் வாரங்களில் என்னுடைய சிறந்த நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலாக இருக்கிறேன். இரண்டு சிறந்த நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறிஉள்ளார்.
ட்ரம்பின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள், அத்துடன் இயற்கையான கூட்டாளியும் கூட. இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை, இருதரப்பு கூட்டாண்மையின் எல்லையற்ற வாய்ப்புகளை திறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க எங்கள் அதிகாரிகள் குழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நானும் அதிபர் ட்ரம்புடன் பேச ஆவலுடன் இருக்கிறேன். இரு நாட்டு மக்களுக்கும் நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இந்த பதிவை, ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறியாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் முரண்பாடு: இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்வதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா மீது 100% வரி விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகளை அவர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ட்ரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.