தியான்ஜின்: ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, ‘இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல’’ என்று இரு தலைவர்களும் உறுதிபட தெரிவித்தனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், எஸ்சிஓ அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்கள் கூறியதாவது:
பிரதமர் மோடி: ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினேன். அதன்பிறகு, இரு நாடுகளின் உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. எல்லை பகுதிகளில் இருந்து பரஸ்பரம் படைகள் வாபஸ் பெறப்பட்டன. தற்போது எல்லையில் அமைதி, ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.
பரஸ்பரம் நம்பிக்கை அடிப்படையில் இரு நாட்டு உறவை முன்னெடுத்துச் செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல. நம்மிடையே நெருங்கிய ஒத்துழைப்பு நீடித்தால், இரு நாடுகளை சேர்ந்த 280 கோடி மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த மனித குலமும் பயனடையும்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்: இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. சீனாவும், இந்தியாவும் அண்டை நாடுகள், நட்பு நாடுகள். இரு நாடுகளிலும் 280 கோடி மக்கள் வசிக்கின்றனர். நாம் கூட்டாளிகள்தான். எதிரிகள் கிடையாது. டிராகனும் (சீனா), யானையும் (இந்தியா) ஒன்றிணைந்துள்ளன. இது மிகச் சரியான முடிவு. வளர்ச்சிப் பாதையில் ஒன்றிணைந்து முன்னேற பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் உலகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இதனால், இரு நாடுகளுக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும். எல்லை பிரச்சினையால் இருதரப்பு உறவு ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு, ஜி ஜின்பிங்குக்கு மோடி அழைப்பு விடுத்தார். இதை ஜின்பிங்கும் ஏற்றுக்கொண்டார். அவர்களது பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகள் இடையிலான வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
சீனாவில் இருந்து அதிக அளவிலான பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், சீனாவுக்கான இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி குறைவாக உள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்ட சீன தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி, தீவிரவாத பிரச்சினையையும் மோடி எழுப்பினார். சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான போரில் சீனா கைகோக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதையும் சீன தரப்பு ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்தும் இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, விரிவாக விவாதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற அந்த போரின்போது, பாகிஸ்தானுக்கு ராணுவரீதியாக சீனா பல்வேறு உதவிகளை செய்தது. இனிமேல், அதுபோன்ற நடவடிக்கைகளில் சீனா ஈடுபடக் கூடாது என்று இந்திய தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதற்கும் சீன தரப்பில் ஆக்கப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தனது காரை மோடிக்கு வழங்கிய ஜின்பிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘ஹாங்கி எல்-5’ என்ற அதிநவீன சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா வந்துள்ள பிரதமர் மோடியின் பயணத்துக்கு சீன அதிபர் பயன்படுத்தும் ‘ஹாங்கி எல்-5’ கார் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் உட்பட 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், மோடியின் பயணத்துக்கு மட்டுமே சீன அதிபரின் கார் வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.