மாஸ்கோ: இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாக ரஷ்ய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை 5.4 பில்லியன் டாலருக்கு வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அதன்படி இந்தியாவுக்கு வழங்கப்பட்ட எஸ்-400 ஏவுகணைகளும், உள்நாட்டு தயாரிப்பு வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. இவை, பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானில் அழித்தன. இதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதேபோல் இந்தியா – ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவான பிரம்மோஸ் ஏவுகணைகளும் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்களை அழித்தன. இதனால் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தக்கு முன் வந்தது.
இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி சீனா சென்றிருந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தை நடந்த இடத்துக்கு அதிபர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் தனது காரில் அழைத்துச் சென்றார். இரு தலைவர்களும் இரு தரப்பு ராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினர்.
இதையடுத்து ரஷ்ய ராணுவத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது.
இந்தியாவிடம் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகள் ஏற்கெனவே உள்ளன. இதை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகளை வழங்குவது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ரஷ்யாவின் சுகோய்-57 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.