நியூயார்க்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குனராக பணியாற்றும் தனது நெருங்கிய நண்பர் செர்ஜியோ கோரை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நெருங்கிய நண்பர் செர்ஜியோ கோர். இவர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் அலுவலக இயக்குனராக உள்ளார். இவரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடகத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருப்பதாவது: செர்ஜியோ கோர் எனது மிகச் சிறந்த நண்பர். இவர் பல ஆண்டுகளாக என்னுடன் இருப்பவர். அவருக்கு பதவி உயர்வு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றுவார்.
சிறப்பு தூதர்: மேலும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் அவர் சிறப்பு தூதராகவும் செயல்படுவார். செர்ஜியோ கோர் தலைமையிலான குழு, அமெரிக்க அரசுத் துறையில் நியமிக்க 4,000 அதிகாரிகளை குறித்த நேரத்தில் தேர்வு செய்தது.
தற்போது அமெரிக்காவில் அதிகாரிகளின் காலி பணியிடங்களில் 95 சதவீதம் நிரப்பப்பட்டுள்ளது. எனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்திலும், செர்ஜியோ கோர் சிறப்பாக பணியாற்றினார், மிகச் சிறப்பாக விற்பனையாகும் எனது புத்தகத்தை அவர்தான் வெளியிட்டார். எனது நிர்வாகத்தில் செர்ஜியோ கோரின் பங்கு முக்கியமானது. நான் நம்பும் ஒருவர் எனது கொள்கையை பரப்பி, அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குவார். அவர் சிறந்த தூதராக செயல்படுவார். அவருக்கு வாழ்த்துகள். இவ்வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.