Last Updated : 13 Aug, 2025 12:11 AM
Published : 13 Aug 2025 12:11 AM
Last Updated : 13 Aug 2025 12:11 AM

டப்ளின்: கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ்.
“இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் வெறுக்கத்தக்கது. நாம் அளிக்கும் மதிப்புகளுக்கு இந்த செயல் முற்றிலும் முரணாக உள்ளது. இத்தகைய நம் எல்லோரையும் குறைத்து மதிப்பிட செய்யும். அயர்லாந்து சமூகத்துக்கு இந்தியர்கள் அளித்த மகத்தான பங்களிப்பை மறைக்கும் வகையில் இது உள்ளது.
இங்கு வாழ்வாதாரம் தேடி வந்தவர்களை நாம் கண்ணியமாக நடத்த வேண்டும். ஏனெனில், இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே ஆழமான வரலாற்று ரீதியான தொடர்பு உண்டு. அது விடுதலை போராட்டத்தில் இருந்து தொடங்கியது என்பதை மறக்க கூடாது. அப்படி நடந்தால் அது நம்மை நாமே இழப்பதற்கு சமம். வன்முறையை தூண்டும் வகையிலான வெறுப்பு பேச்சுகள் தனிநபர்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு அயர்லாந்து சமூகத்தின் நீடித்த மற்றும் அடிப்படை உள்ளுணர்வை அழித்துவிடும்” என தனது அறிக்கையில் அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கூறியுள்ளார்.
அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தாக்குதல்: கடந்த ஜூலை 19-ம் தேதி அன்று 40 வயதான இந்தியாவை சேர்ந்த அமேசான் ஊழியர் அயர்லாந்தில் தாக்குதலுக்கு ஆளானார். அவரது முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும், ஆடை கிழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
பின்னர் டப்ளின் நகரில் 32 வயதான இந்தியர் மீது நடந்த தாக்குதலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல். இதே போல லக்விர் சிங் என்பவர் மீது தாக்குதல் நடந்தது. ‘நீ உன் சொந்த நாட்டுக்கு திரும்ப செல்’ என சொல்லி அந்த தாக்குதல் அவர் மீது நடந்தது. ஆகஸ்ட் 6-ம் தேதி அன்று சைக்கிளில் பணிக்கு சென்ற இந்தியர் மீது தாக்குதல் நடந்தது. அதே நாளில் 6 வயது சிறுமி மீது சிறுவர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சூழலில்தான் அந்த நாட்டு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டப்ளினில் வெளிநாட்டினர் மீதான இனவெறித் தாக்குதல் சம்பவங்களை அடுத்து அண்மையில் அயர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், இந்திய மக்களை முன்னெச்சரிக்கை உடன் இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
FOLLOW US
தவறவிடாதீர்!