வாஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
கடந்த மே 10-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில், இந்தியா – பாகிஸ்தான் போரை இரவு முழுவதும் நீடித்த மத்தியஸ்தத்தின் மூலம் முழுவதுமாக, உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அதே கருத்தை 40 முறை சொல்லிவிட்டார்.
நேற்றிரவு (சனிக்கிழமை இரவு) நடந்த விருந்து நிகழ்வில் ஒன்றில் பேசிய ட்ரம்ப், “உலக அரங்கில் நாம் செய்துவரும் சில செயல்களால், நாம் இதற்கு முன்னர் இல்லாத அளவிலான மரியாதையை இப்போது பெற்று வருகிறோம். நாம் உலக நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறோம். போர்களை நிறுத்தி வருகிறோம். நாம் இந்தியா – பாகிஸ்தான், தாய்லாந்து – கம்போடியா உள்பட 7 போர்களை நிறுத்தியுள்ளோம்.
அதிலும், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நான் எப்படி நிறுத்தினேன் தெரியுமா? வர்த்தகத்தை சுட்டிக் காட்டி நிறுத்தினேன். இந்தியா – பாகிஸ்தான், தாய்லாந்து – கமோடியா, அர்மேனியா – அஜர்பைஜான், கொசோவா – செர்பியா, இஸ்ரேல் – ஈரான், எகிப்து – எதியோபியா, ருவாண்டா – காங்கோ என 7 போர்களை நிறுத்தியுள்ளேன். இவற்றில் 60% போர்கள் வர்த்தக ஒப்பந்தங்களை முன்வைத்தே நிறுத்தப்பட்டன.
இப்போது, நான் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தினால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்றார்கள். அவர்களிடம், “அதான் 7 போர்களை நிறுத்திவிட்டேனே!. ஒவ்வொரு போர் நிறுத்தத்துக்குமே ஒரு தனி நோபல் பரிசு தர வேண்டும், என்றேன்.”. ஆனால், அவர்களோ, “ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தினால் கிடைக்கலாம்.” என்கிறார்கள்.
அது ஒரே ஒரு போர் தான். ஆனால் மிகப்பெரிய போர். ஆரம்பத்தில், புதின் என்னுடன் நல்ல உறவில் இருப்பதால், ரஷ்யா – உக்ரைன் போரை சீக்கிரமாகவே முடிக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர் என் நம்பிக்கையை ஏமாற்றிவிட்டார். இருப்பினும், ரஷ்யா – உக்ரைன் போரை எப்படியாவது நிறுத்துவோம்.” என்று கூறியுள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் மீண்டும், மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போர் பற்றி பேசிவரும் சூழலில், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றவுள்ளார். அது மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
போர் நிறுத்தத்துக்கு உரிமை கோரல், 50% வரி விதிப்பு, எச்1 -பி விசாவுக்கான கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் அமெரிக்காவுடனான உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில் இன்றைய பிரதமர் உரை மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.