காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜலாலாபாத் அருகில் பூமியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குனார் மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கு பெரும்பாலான வீடுகள், மண், பாறைகளை கொண்டு கட்டப்பட்டிருந்ததால், நிலநடுக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அவை இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குனார் மாகாணத்தில் 1,411 பேர், நங்கர்கர் மாகாணத்தில் 12 பேர் என 1,423 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை இரு மாகாணங்களிலும் சுமார் 3,500 ஆக உயர்ந்துள்ளது.
குணார் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர் கூறுகையில், “தொலைதூர கிராமங்களில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறோம். சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்ட இன்னும் சில கிராமங்களுக்கு எங்களால் செல்ல முடியவில்லை” என்றார்.