புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை திருப்பித் தர வேண்டும் என ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து, பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்காவுக்கும், தாலிபானுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் கூடிய விரைவில் ஒப்படைக்க வேண்டும். அந்த விமானத் தளத்தை திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். ஏனென்றால், அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க விரும்புகிறார் என கூறப்படுகிறது.
பாக்ராம் விமான தளத்தின் சிறப்பு என்ன?: அமெரிக்காவால் கட்டப்பட்ட பாக்ராம் விமான தளம், பல சர்வதேச விமான நிலையங்களை விட நீளமான ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு தங்குமிடங்கள், மருத்துவமனைகள், எரிபொருள் கிடங்குகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும், அமெரிக்க துருப்புகளுக்கு உதவும் வகையில், இப்பகுதியிலேயே பர்கர் கிங் மற்றும் பிட்ஸா ஹட் போன்ற துரித உணவு கடைகளும், துணி கடைகளும் இடம் பெற்றுள்ளன. சீனாவுக்கு அருகாமையில் இருப்பதால், இந்த விமானப்படை தளம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.