காபூல்: கடந்த 12 மணி நேரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் 2,200 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜலாலாபாத் அருகில் பூமியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமை (செப்டம்பர் 4) நிலவரப்படி இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,205 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 3,640 ஆகவும் உள்ளதாக தலிபான் நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 160 கிமீ தூரத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) தென்கிழக்கில் 10 கிமீ ஆழத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.