அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் யாவும் அதற்கேற்ற விளைவுகளை உலகம் முழுவதும் கடத்துவது காலங்காலமாகவே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான், அமெரிக்கா என்றால் ‘பொருளாதார சூப்பர் பவர்’ என்ற அந்தஸ்து இருக்கிறது. இந்தச் சூழலில்தான் அமெரிக்காவில் ‘எகனாமிக் ஷட்டவுன்’ என்ற செய்தி பரவலாக பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்கா ஷட்டவுன் / பணி முடக்கம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? இந்த ஷட்டவுன் என்ன மாதிரியான தாக்கத்தை அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும்? உலக நாடுகளுக்கு இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா போன்றவற்றை சற்றே சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்க்கலாம்.
ஷட்டவுன் அல்லது பணி முடக்கம் என்றால் என்ன? – முதலில் யுஎஸ் ஷட்டவுன் அல்லது பணி முடக்கம் என்றால் என்னவென்று பார்ப்போம். அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30-ல் முடிவடையும். அக்.1-ல் புதிய நிதியாண்டு தொடங்கும். இதனையடுத்து ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா செப்.30-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்று செனட் சபை, மற்றொன்று பிரதிநிதிகள் சபை. அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும்.
அவ்வாறாக 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்படும். இதனால் சில நேரங்களில் அத்தியாவசிய சேவைகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் தவிர மற்ற துறைகளில் இருப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படும் சூழல் ஏற்படும். சில நேரங்களில் அந்தத் துறைகள் தற்காலிகமாக மூடப்படுவதால் அவர்கள் முடங்கவும் நேரிடும். இதை ஃபர்லோ ஸ்டேட்டஸ் (furlough status) என்கிறார்கள்.
சில நேரங்களில் அவர்கள் தற்காலிகமாக விடுவிக்கப்படாமல் பணி நீக்கம் செய்யப்படுவதும் உண்டு. அதேபோல் அத்தியாவசிய சேவைகளின் உள்ளவர்கள் பணியில் இருந்தாலும் அவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாது. ஷட்டவுன் முடிந்தபின்னர் நிலுவைத் தொகையாக அது கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இதுதான் ஷட்டவுன் அல்லது பணி முடக்கம்.
இந்நிலையில், புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு ஆதரவாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 சதவீதம் பேரும், ஜனநாயக கட்சியின் 47 சதவீத உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேறாததால் நள்ளிரவு 12 மணிக்கு அமெரிக்க அரசு முடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபப்ட்டது.
இந்த முடக்கத்துக்குப் பின்னணியில் அஃபர்டபிள் கேர் (அல்லது) ஒபாமா கேர் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், எல்லை பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளாததும் பிரதானக் காரணமாக இருக்கிறது.
இந்த முடக்கம் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும்? – சரி, அமெரிக்க அரசு முடங்கிவிட்டது. அது அமெரிக்காவில் தானே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிறுத்திவிட முடியாது. ஏனெனில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏதேனும் மந்தநிலை ஏற்பட்டால் அது உலகம் முழுவதும் பிரதிபலிக்கும்.
ஏற்கெனவே உலக நாடுகளுக்கு பதில் வரி விதிப்பு, இந்தியா போன்ற சில நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு உள்ளிட்ட அமெரிக்க கொள்கைகளால் அங்கு அரசியல் ரீதியாக கருத்து மோதல்கள் நிலவுகின்றன. ‘பிக் பியூட்டிஃபுல் பில்ஸ்’ என்ற ட்ரம்ப்பின் வரி விதிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் எலான் மஸ்க் அமெரிக்க நிர்வாகத்திலிருந்து விலகினார்.
இந்நிலையில், அமெரிக்க அரசு முடக்கம் என்பது அதன் பொருளாதார நிச்சயமற்றத் தன்மையைக் குறிப்பதாகும். அதனால், உலகளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதன் மீதான முதலீட்டை அதிகரிப்பர். இந்தத் தாக்கத்தை கடந்த இரண்டு நாட்களாகவே இந்தியாவில் எதிரொலிக்கக் கண்டு வருகிறோம். இதே போக்கு தங்கம் மீதான முதலீட்டைப் பொறுத்தவரை உலகம் முழுவதுமே தொடரக் கூடும்.
உள்நாட்டைப் பொறுத்துவரை ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் காவல் துறை, அஞ்சல் துறை, மருத்துவத் துறை, ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, விமானக் கட்டுப்பாட்டுத் துறை, சமூக பாதுகாப்புக்கான நிதி விடுவிக்கும் துறை, வங்கிகள், நீதித்துறை உள்பட சில சேவைகள் தான் இயங்கும். அரசின் புள்ளி விவரங்கள் துறை கூட செயல்படாது என்பதால், அமெரிக்க பொருளாதார நிலவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாது. இதனால், நிச்சயமற்றத்தன்மை அதிகரிக்கும். விசா விண்ணப்பங்கள் பரிசீலனையில் தாமதம், வரி வசூலில் சுணக்கம் உள்ளிட்டவையும் ஏற்படக் கூடும்.
சுற்றுலாத் துறை, அருங்காட்சியங்கள், தேசிய பூங்காக்கள் உள்ளிட்டவை முடங்கும். இதனால் இதுபோன்ற எண்ணற்ற துறைகளில் உள்ள அரசு ஊழியர்கள் பணி முடங்கும். அவர்கள் கிட்டத்தட்ட பணியிழந்ததைப் போன்றுதான். நிதி நிலைமை சரியானால் அவர்கள் ஒரு சில வாரங்களில் பணியில் மீண்டும் இணையலாம். சிக்கல் நீடித்தால் சிலர் அவர்களாகவே பணியை துறந்து செல்லக்கூடும். இன்னும் சிலர் அரசால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இப்போதைய நிலவரப்படி சுமார் 7 லட்சத்து 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், அதிபர் ட்ரம்ப் இந்த ஷட் டவுன் பற்றி கூறுகையில், ‘நாங்கள் நிறைய அரசு ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்பப் போகிறோம். ஆனால் அதில் பெரும்பாலானோர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.
உடனடி விளைவுகளும், நீண்ட கால தாக்கங்களும்: அமெரிக்காவில் இதுபோன்ற ஷட்டவுன்கள் நிகழ்வது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2013-ல், 2018 முதல் 2019 வரை இவ்வாறான அரசு முடக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 2013 காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டால், அரசு செயல்பாட்டில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது தற்காலிக பணி நீக்கத்துக்கு உள்ளானோரில் 31% பேர் வரை ஓராண்டுக்குள் தங்கள் பணியை ராஜினாமா செய்துவிட்டனர்.
நிதிச் சூழல் சரியான பின்னரும் கூட அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மாறாக, தற்காலிகப் பணியாளர்களை அரசு பணி அமர்த்த நேர்ந்தது. அதனால், நிதி மேலாண்மை சார்ந்த பணிகள், சட்ட அமலாக்கத் துறைகள் ஆகியனவற்றின் பணிகளில் துல்லியம் தவறியது. ஷட் டவுன் முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை அதன் தாக்கத்தை அரசுத் துறைகளில் பார்க்க முடிந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
அதுவும் குறிப்பாக இளைஞர்கள், பெண் ஊழியர்கள், கற்றறிந்த தொழில்முறை நிபுணர்கள் தனியார் வேலைவாய்ப்புகளில் தங்கள் கவனத்தை திருப்புவது நேர்ந்தது என்கின்றனர். ஊழியர்கள் அரசுத் துறை வேலைவாய்ப்புகளுக்கு நிரந்தரமாக முழுக்குபோட ஊதியத்தைவிட, அரசு முடக்கத்தால் ஏற்படும் உளைச்சலே பிரதானக் காரணம் என்று கூறப்படுகிறது.
அப்படியென்றால் இந்த ஷட்டவுன் எப்படித் தான் முடிவுக்கு வரும் என்ற கேள்வியும் எழலாம். ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் கைகளில் தான் இது இருக்கிறது. செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 47% பேரில் சிலர் கருத்து மோதல்களை விலக்கி வைத்துவிட்டு குடியரசுக் கட்சியின் கொள்கைகளை ஏற்பதாக ஒப்புக் கொண்டால் இந்த பணி முடக்கம் முடிவுக்கு வரும்.
ட்ரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்திலும் இது போன்ற பணி முடக்கம் ஏற்பட்டுள்ளது. அது 38 நாட்கள் வரை நீடித்தது. இந்த முறை இது எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பதைப் பொறுத்தே அது அமெரிக்க பொருளாதாரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கூற முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த முறை ஏற்பட்டுள்ள அரசு முடக்கம் நீடித்தால் ஒவ்வொரு வாரமும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 0.2% வரை சரிவைக் காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் சற்றே கடுமையானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் பகுதியான ஷட்டவுன் நிலவிவந்த நிலையில் தற்போது முழுமையான ஷட்டவுன் நிலவுவதால் குடியரசு – ஜனநாயகக் கட்சியினர் இடையேயான கருத்து மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வருவதிலும் சிக்கல் நிலவுகிறது.