வாஷங்டன்: வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும், பல ஆண்டுகளாக அவர்களின் வரிகள் மிகவும் அதிகமாகவே இருக்கின்றன. அவை உலகிலேயே மிகவும் அதிகம். மேலும், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான, அருவருப்பான பணமற்ற வர்த்தகத் தடைகளை அவர்கள் கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்ல, அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவத்துக்கான தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்தே அதிக அளவில் வாங்கி வந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்தும் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவருமே விரும்பும் நேரத்தில், அவர்கள் (இந்தியா) சீனாவுடன் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்குகிறார்கள். இவை எதுவும் நல்லதல்ல.
எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.