அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா விமானப்படை தளத்தில் எப்-35 ரக போர் விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. விமானி பாராசூட் மூலம் தப்பினார்.
அமெரிக்க விமானப்படையின் எப்-35 போர் விமானம் அலாஸ்கா விமானப்படைத்தளத்தில் இருந்து நேற்று வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது. அப்போது மைனஸ் 18 டிகிரி குளிர் நிலவியது. வானில் வெற்றிகரமாக பறந்த விமானம் தரையிறங்கும் போது, அதன் சக்கரங்கள் முழுவதுமாக வெளியேறவில்லை. அதில் உள்ள ஹைட்ராலிக் பைப்களில் பனிக்கட்டி படிந்திருந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டது.
பைலட்டுக்கு சக்கரம் முழுவதும் வெளியேறிய நிலையில் இருப்பதாக சென்சார்கள் காட்டியது. இப்பிரச்சினை குறித்து விமானப்படைத் தள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறை பைலட் சரிசெய்வது குறித்து, அந்த விமானத்தை தயாரித்த லாக்கீட் மார்டின் நிறுவன பொறியாளர்களுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 50 நிமிடங்கள் விமான நிறுவன பொறியாளர்களுடன், பைலட் கலந்துரையாடி பிரச்சினையை சரிசெய்வது குறித்து ஆலோசித்தார்.
பாதி வெளிவந்த நிலையில் உள்ள சக்கரத்துடன் விமானத்தை தரையிறக்கி மீண்டும் மேலெழும்ப முயன்றால், அது முழுவதுமாக வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என பொறியாளர்கள் யோசனை தெரிவித்தனர். அதன்படி இரண்டு முறை போர் விமானத்தை தரையிறக்கும் முயற்சியில் விமானி ஈடுபட்டார். ஆனால் சக்கரம் முழுவதுமாக வெளியேறுவதற்கு பதில், முற்றிலுமாக உள்ளே சென்று முடங்கிவிட்டது.
இதனால் விமானி அந்த விமானத்தை ஓடு பாதை அருகே கொண்டு வந்து, விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து வெளியேறினார். இதனால் அந்த விமானம் ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
விமானப்படை குழுவினர் ஆய்வு செய்தபோது, பனி படர்ந்திருந்ததால் விமான சக்கரத்தின் ஹைட்ராலிக் குழாயில் உள்ள திரவத்தில் 3-ல் ஒரு பகுதி தண்ணீர் நிரம்பியிருந்தது கண்டறிப்பட்டது. இதை முன்கூட்டியே சரிபார்த்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.