புதுடெல்லி: அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தாக்குதல், திருட்டு, ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து பொருட்களைத் திருடுதல் போன்ற செயல்களில் நீங்கள் அமெரிக்காவில் ஈடுபட்டால், அது சட்ட சிக்கல்களை உருவாக்கும். அது உங்கள் விசா நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, அதன்பின்னர் நீங்கள் அமெரிக்காவுக்குள் என்றைக்குமே நுழையாதபடி செய்யும். சட்டம், ஒழுங்கை அமெரிக்கா மதிக்கிறது. அமெரிக்க சட்டதிட்டங்களை இங்குவரும் வெளிநாட்டவரும் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
வைரலான திருட்டு வீடியோ – அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
விடுமுறை நாட்களை அமெரிக்காவில் கழிக்கச் சென்ற இந்தியப் பெண் ஒருவர், இந்திய மதிப்பில் ரூ.1.1 லட்சம் மதிப்புடைய பொருட்களை ஒரு கடையில் இருந்து திருடியுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், தான் பிடிபட்டதை அறிந்து அந்தப் பெண், போலீஸாரிடம் “நான் பொருட்களுக்கான பணத்தைக் கொடுத்துவிடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள்.” என்று வாக்குவாதம் செய்வதும் இடம்பெற்றுள்ளது. அதற்கு போலீஸார், “கடையில் இருந்து இந்தப் பொருட்களுடன் கிளம்புவதற்கு முன்னரே நீங்கள் அதற்கு பணம் கொடுத்திருக்கலாம். அந்த வாய்ப்பு அப்போது இருந்தும் நீங்கள் அதைச் செய்யவில்லை. பணம் கொடுக்காமல் செல்லலாம் என்று முடிவு செய்தே நீங்கள் வெளியேறினீர்கள். அதனால், பொருட்களுக்கு பணம் செலுத்தும் வாய்ப்பு இப்போது உங்களுக்கு இல்லை. நாங்கள் கைது முடிவில் பின்வாங்குவதற்கும் இல்லை” என்றனர்.
அடுத்தடுத்து கெடுபிடி.. கடந்த மாதம் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாக இந்திய மாணவர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டு, நாடுகடத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு, சட்டவிரோதமாக நுழைய முயற்சித்தல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தது. இப்போது களவு குறித்து எச்சரித்துள்ளது.
அதேபோல், அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளைக் கண்காணிக்கவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க விசா கோரி விண்ணப்பித்த இந்தியர்களுடனான நேர்காணலை ரத்து செய்த தூதரகம் அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.