வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசில் செலவீனங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். இந்த நிலையில், நிதி மசோதாவுக்கு ஆதரவாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 சதவீதம் பேரும், ஜனநாயக கட்சியின் 47 சதவீத உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
நிதி மசோதாவுக்கு 60 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களிக்காத காரணத்தால் இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை சமூக ஊடகங்களில் வெளியிட்ட படத்தில் ‘டெமாகிரட்டிக் ஷட் டவுன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய பணிகளான விமான சேவை, அறிவியல் ஆராய்ச்சி, ராணுவம் ஆகியவற்றின் பணிகள் தொடர்ந்து இயங்கும். ஆனால், அந்த ஊழியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படும். அதே நேரத்தில் அத்தியாவசியமற்ற பணிகளாக கருதப்படும் 7,50,000 அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இந்த வகை அரசு ஊழியர்களுக்கு அமெரிக்க அரசு ஒவ்வொரு நாளும் 400 மில்லியன் டாலர் செலவு செய்கிறது.
இதுகுறித்து பேசிய செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர், “குடியரசுக் கட்சியினர் மருத்துவ திட்டத்துக்கான மானியங்கள் மற்றும் பிற முன்னுரிமைகளை முறியடிப்பதன் மூலம் ஜனநாயகக் கட்சியினரை கொடுமைப்படுத்த முயற்சிக்கின்றனர்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
நிதி மசோதா வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “நாங்கள் நிறைய பேரை பணிநீக்கம் செய்வோம். அவர்கள் ஜனநாயகக் கட்சியினராக இருக்கப் போகிறார்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.