டல்லாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் உள்ள ஓர் உணவகத்தில் மேலாளராக கர்நாடகாவை சேர்ந்த சந்திரமவுலி நாகமல்லையா (50) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி நிஷா மற்றும் 18 வயது மகன் கவுரவ் உடன் உணவகத்திலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை உணவகத்தின் மற்றொரு ஊழியரான யோர்டானிஸ் கோபோஸ் மார்டினெஸ் (37) ஓர் அறையை சுத்தம் செய்தபோது அங்கு சென்ற நாகமல்லையா பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மார்டினெஸ் நாகமல்லையாவை கத்தியால் சரமாரியாக தாக்கினார்.
அப்போது நாகமல்லையாவின் மனைவியும் மகனும் தடுக்க முயன்றுள்ளனர். எனினும் அவர்களை தள்ளிவிட்டு, நாகமல்லையாவை தலையை துண்டித்து மார்டினெஸ் கொடூரமாக கொலை செய்தார். துண்டிக்கப்பட்ட தலையை எட்டி உதைத்த மார்டினெஸ், பிறகு அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அங்கிருந்து புறப் பட்டுள்ளர். தகவலறிந்த போலீஸார் ரத்தக் கறையுடன் இருந்த மார்டி னெஸை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் மார்டினெஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
கியூபாவை சேர்ந்தவரான மார்ட்டினெஸ் ஏற்கெனவே ஆட்டோ திருட்டு, தாக்குதல் உள்ளிட்ட குற்றப் பின்னணி கொண்டவர் எனவும் அவரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளதாகவும் டல்லாஸ் போலீஸார் தெரிவித்தனர். இந்த கொடூர கொலைச் சம்பவம் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நாகமல்லையாவின் மனைவி நிஷா, கல்லூரிப் படிப்பை தொடங்கவிருக்கும் மகன் கவுரவ் ஆகியோருக்காக நிதி திரட்டுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் ‘கோஃபண்ட்மீ’ என்ற பெயரில் இணைய பக்கத்தை தொடங்கினார். அதில் நன்கொடை அடுத்த சில மணி நேரத்தில் 54,000 டாலரை கடந்தது. நாகமல்லையாவின் துயர மரணத்திற்கு ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. நாகமல்லையாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.