இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎம்எல்(என்) தலைவர்களும் மறுத்துள்ளனர். அதேவேளையில், ராணுவத் தளபதி அசிம் முனீர் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
பாகிஸ்தானில் கடந்த 2024-ல் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி. போதிய பெரும்பான்மை இல்லாததால், பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். ஆசிப் அலி சர்தாரி நாட்டின் அதிபரானார்.
இந்நிலையில், ஆசிப் அலி சர்தாரிக்கும் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கும் இடையே மோதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள அதிகாரத்தைக் காட்டிலும் ராணுவத்துக்கு அதிக அதிகாரத்தை உறுதிப்படுத்த அசிம் முனீர் முயல்வதாகவும், அதற்கு மறைமுக கட்டுப்பாடுகளை விதிக்கும் நடவடிக்கைளை ஆசிப் அலி சர்தாரி எடுப்பதாகவும் கூறப்படுகிறது. அசிம் முனீர் முன்மொழியும் நபர்களை அங்கீகரிப்பதை சர்தாரி தாமதப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, ஆசிப் அலி சர்தாரியின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், இந்தியாவின் நம்பிக்கையைப் பெற முக்கியத் தீவிரவாதிகளை அந்நாட்டிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு ஆட்சபணை இருக்காது என கூறி இருந்தார். இது பாகிஸ்தானில் உள்ள ஜிகாதி குழுக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராணுவத் தளபதியின் கோபத்துக்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
இவை ஒருபுறம் இருக்க, சமீபத்திய உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு அளித்த சமீபத்திய தீர்ப்பின் காரணமாக, ஆளும் பிஎம்எல்(என்) கட்சியின் பலம் தேசிய அவையில் 218ல் இருந்து 235 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. எனவே, பிபிபி-ன் ஆதரவு தேவை இல்லை என்ற நிலை உருவாகி இருப்பதும் சர்தாரி நீக்கத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.
எனினும், பிபிபி கட்சியின் பொதுச் செயலாளர் ஹூசைன் புகாரி இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். “பிபிபி கட்சியின் ஆதரவு இல்லாமல் அரசாங்கம் செயல்பட முடியாது. அதிபர் சர்தாரிக்கு எதிராக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. அதிபர் சர்தாரி நீக்கப்பட இருப்பதாகக் கூறுபவர்கள் அரசியலமைப்பு மற்றும் சட்டம் குறித்த புரிதல் இல்லாதவர்கள்” என அவர் விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்துள்ள பிஎம்எல் (என்) கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இர்பான் சித்திக், “அதிபரை மாற்றும் எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. நாட்டின் தலைவராக ஆசிப் அலி சர்தாரி தனது அரசியலமைப்பு கடமைகளை திறம்பட நிறைவேற்றி வருகிறார். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையல்ல” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ராணுவத் தளபதி அசிம் முனீர் நாட்டில் ராணுவ ஆட்சியை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே அதிபர் சர்தாரியை பதவியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.