திருவண்ணாமலை: நான்கு வேதங்களையும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் கூறினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார மாநாடு நேற்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டின் 2-வது நாளான நேற்று காலை 1,008 மகளிர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் தலைமை வகித்தார். சென்னை வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீஜெகதீஷ் கடவுள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காஞ்சி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா சுவாமிகள் திருவிளக்கு பூஜையைத் தொடங்கி வைத்து அருளாசி வழங்கினார்.
அவர் பேசியதாவது: அம்மன் அருள் நம்மை கவசமாக இருந்து பாதுகாக்கிறது. அம்பாள் நமது அனைத்து வியாதிகளையும் நீக்கி, செல்வங்களையும், ஞானத்தையும் அளித்து வருகிறார். அஷ்டமி, நவமி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்பாளை தரிசிப்பது மிகவும் சிறப்பானது. ஒருவர் எப்படி வாழ வேண்டும், படிக்க வேண்டும், இல்லறம் நடத்த வேண்டும் என்பதற்கு பாரத தேசம் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
நமது தேசம் மேலும் வளர வேண்டும். அதற்கு நமது கலாச்சாரம் வளர வேண்டும். அந்த உயர்ந்த கலாச்சாரத்தைப் பராமரிப்பதற்கு, பாதுகாப்பதற்கு, வளர்ப்பதற்கு உரிய கல்வி மற்றும் ஆன்மிக கல்வியைக் குழந்தைகள் அனைவருக்கும் கற்றுத்தந்து, கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பக்திப் பூர்வமாக வளர்த்து, சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் பேசும்போது, “திருவாரூரில் பிறந்தாலும், காசியில் உயிரிழந்தாலும் முக்தி கிடைக்கும் என்பார்கள். ஆனால், அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும். அப்படிப்பட்ட இந்தப் புண்ணிய ஸ்தலத்தில் அற்புதமாக நமது கலாச்சார மாநாடு நடந்துள்ளது. மகரிஷிகள் நமக்கு ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை கொடுத்துச் சென்றுள்ளார்கள். இவற்றை எல்லாம் மீண்டும் நமது பாடத் திட்டத்தில் கொண்டுவர வேண்டும். அவற்றை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேல்நாட்டில் இந்த வேதங்களை நன்கு படித்து, அவர்கள் வாழ்கையில் பின்பற்றி வருகிறார்கள். நமது பண்பாடு, கலாச்சாரத்தைப் பாதுகாத்தாலே நமக்கு எல்லாம் கிடைத்துவிடும். சபரிமலை மகர ஜோதி, வடலூரில் வள்ளலார் ஏற்றிவைத்த தைப்பூச ஜோதி போன்றவை பெரிய ஜோதிகளாகும். ஆனால், அவற்றுக்கு எல்லாம் மேலான ஜோதியாகவும், அருட்பெரும் ஜோதியாகவும் இருக்கக் கூடியது திருவண்ணாமலை கார்த்திகை தீப ஜோதியாகும். இந்த அற்புதமான நிகழ்ச்சிகளை நாம் உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், சென்னை தொழிலதிபர் பி.சக்தீஸ்வரன், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, இளவரசு பட்டம் பி.டி.ஆர்.கோகுல் குருக்கள் எழுதிய அருணாச்சல தீர்த்த மகிமை என்ற நூல் வெளியிடப்பட்டது.