ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்று காலை பெரியாழ்வார் மங்களாசாசன உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஜூலை 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 வண்டி சப்பரமும், 4ம் நாள் விழாவில் ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.
நேற்று காலை 10.30 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பெரியாழ்வார் எழுந்தருளினார். அதன்பின், ஆடிப்பூர கொட்டகையில் எழுந்தருளிய பெரிய பெருமாள், காட்டழகர் கோயில் சுந்தர்ராஜபெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், நின்ற நாராயண பெருமாள் கோயில் திருத்தங்கல் அப்பன், ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு மேல் 5 கருட சேவை நடைபெற்றது.
இதில் பெரிய பெருமாள், ஸ்ரீ ரெங்கமன்னார், திருத்தங்கல் அப்பன், சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோர் கருட வாகனங்களிலும், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் ஆண்டாள் கோயிலில் எழுந்தருளி, ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா ஜூலை 28-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.